சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்குத் தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
18 மலைத்தொடர்களுக்கு நடுவே சுவாமி ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை முழுவதிலும் கார்த்திகை மாதம் வந்துவிட்டால் சரண கோஷங்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். ஜாதி, மதம், மொழி, இனம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துவிதமான பக்தர்களும் ஐயப்பனை தரிசிக்கவும், அவரது அருளாசிகளைப் பெறுவதற்கும் விரதம் மேற்கொண்டு, கடினமான மலைப் பாதையில் பயணம் செய்து மலை உச்சியில் அமர்ந்திருக்கும் ஐயப்பனை காண வருகின்றனர்.
ஐயப்பர் வரலாறு:
மகிஷாசுரனை வதம் செய்த அன்னை ஆதிபராசக்தியின் மீது கோபம் கொண்டு, அவனது தங்கையான மகிஷி பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிந்து வரங்களைப் பெற்றாள். வரம் பெற்ற மகிஷி தேவர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தி வந்தாள். இதைக் கண்ட சிவபெருமானும், விஷ்ணுவும் மகிஷியை அழிக்க வேண்டி, விஷ்ணு மோகினி அவதாரமெடுக்க, சிவபெருமானுக்கும், விஷ்ணுவான மோகினிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அனைத்து தெய்வாம்சங்களும் அமைந்திருந்தது. சிவனும், விஷ்ணுவும் காட்டில் ஒரு மரத்தடியில் குழந்தையை அதன் கழுத்தில் ஒரு மணி மாலையை அணிவித்து போட்டுவிட்டு சென்றுவிட்டனர். எல்லாம் இறைவனின் லீலை.
இதற்கிடையே கேரளாவில் பந்தள மகாராஜா ராஜசேகரனும், அவனது மனைவியும் குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர். அவர்கள் இருவரும் இறைவனிடம் மனமுருக பிரார்த்தித்து வந்தனர். ஒரு நாள் பந்தள மகாராஜா காட்டிற்கு வேட்டைக்கு வந்தார். அப்போது காட்டிற்குள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. மகாராஜாவுக்கோ சந்தேகம், காட்டிலிருந்து எப்படி குழந்தை சத்தம் வருகிறது என்று தேடினார். அப்போது மரத்தடியில் இருந்த குழந்தையைப் பார்த்து அருகில் சென்றார். அங்கே ஜொலித்துக் கொண்டிருந்தார் ஐயப்பர்.பந்தள மன்னனுக்கு ஒரே மகிழ்ச்சி. குழந்தையில்லையே என்ற இறைவனை பிரார்த்திர்த்தது வீண் போகவில்லை. அந்தப் பகவான் தான் நமக்கு இந்தக் குழந்தையைக் கொடுத்திருக்கிறார் என்று ஆசையோடும், அன்போடும் அரண்மனைக்கு எடுத்து வந்தார். மகாராணியும் குழந்தையைப் பார்த்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாள். ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் நிறைந்த குழந்தை என்று கூறினார். கழுத்தில் மணி மாலையோடு இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பந்தள மகாராஜா. நாளடைவில் மகாராணியும் கர்ப்பமுற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ராஜராஜன் என்று பெயரிட்டனர். மகாராஜவுக்கும், மகாராணிக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. மணிகண்டன் வந்த நேரம் தான் நமக்கு இன்னொரு குழந்தை கிடைத்திருக்கிறது என்று எண்ணினர்.
மந்திரியின் சதி:
அரண்மனையில் சிறப்பாக வளர்ந்து வந்த மணிகண்டனுக்கு பந்தள மகாராஜா பட்டாபிஷேகம் நடத்த முடிவு செய்தார். இதையறிந்த மந்திரி எங்கே மணிகண்டன் அரசரானால் தனக்கான முக்கியத்துவம் போய்விடுமோ என்று பயந்து சதி செய்தான். மகாராணியிடம் சென்று உங்களுக்குப் பிறந்த குழந்தையிருக்க, மன்னர் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்யவிருக்கிறார். அதனால் ராஜராஜனுக்குப் பதிலாக மணிகண்டன் அடுத்த அரசராகி விடுவான் போலிருக்கிறது என்று ராணியின் மனதில் விஷத்தை விதைத்தான்.
புலிப்பால் கொண்டு வரச்சென்ற ஐயப்பர்:
மந்திரியின் சூழ்ச்சியால் ராணி தனக்கு தீராத வயிற்று வலி வாட்டுகிறது என்றும், அரண்மனை வைத்தியரைக் கொண்டு இதற்குப் புலிப்பால் கொண்டு வந்தால் குணமாக்க முடியும் என்று சொல்ல வைத்தாள். சூழ்ச்சியை அறிந்து கொண்ட 12 வயது பாலகனான ஐயப்பன் காட்டிற்கு சென்றார். காட்டிற்குள் வந்து கொண்டிருந்த ஐயப்பனை தடுத்து நிறுத்தினாள் மகிஷி. வில்லாளி வீரன் ஐயப்பன் மகிஷியுடன் சண்டையிட்டு இறுதியில் மகிஷியை அழித்தார்.
மகிஷியின் அழிவால் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் மகிழ்ந்தனர். இந்திரன் புலியாக மாறினார். அவர்மீது அமர்ந்தார் ஐயப்பர். தேவர்களும் புலிப்படையாக மாறினர். ஐயப்பர் புலிமேல் அமர்ந்து அரண்மனையை நோக்கி வந்தார். ஊருக்குள் புலிகள் கூட்டமாக வருவதைக் கண்ட மக்களும், மகாராணியும் அஞ்சினர். மகாராணியும், மந்திரியும் தங்களது தவறை உணர்ந்து ஐயப்பனிடம் மன்னிப்புக் கோரினர்.
ஐயப்பனும் தனது அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும், நான் பூமியில் எதற்காகப் பிறந்தேனோ அந்த வேலை முடிந்துவிட்டது. அதனால் நான் தேவலோகம் செல்கிறேன் என்றார். மகனைப் பிரியப் போகிறோமே என்று மனமுடைந்த பந்தள மன்னன் ஐயப்பனிடம் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக ஒரு கோயில் கட்ட விரும்புகிறோம். அதை எங்குக் கட்ட வேண்டும் என்று கேட்டான். ஐயப்பர் ஒரு அம்பை எடுத்து எய்தார். இந்த அம்பு எங்குப் போய் விழுகிறதோ அங்கே கோயில் கட்டுங்கள் என்றார். அந்த அம்பு சபரி மலையில் போய் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கித் தனக்கும், பக்கத்தில் மாளிகைபுறத்தம்மனுக்கும் கோயில் கட்டுங்கள் எனக் கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.மணிகண்டனின் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் பந்தள மன்னர் ஊண் உறக்கம் இல்லாமல் தானே நேரடியாக மேற்பார்வை கொண்டு பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலைக் கட்டினார். அங்கு ஆண்டுதோறும் லட்சோப லட்சம் பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலை வந்து தரிசித்து ஐயப்பனின் அருளைப் பெறுகின்றனர்.
சபரிமலை கோயில்:
ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ப்புல் போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது. அந்த ஓட்டு வீட்டின் முகப்பும் நீட்டிவிடப் பெற்றுச் சாய்ப்பான ஓட்டு வீடு போல்தான் இருக்கும். ஐயப்பனின் முன்னுள்ள ஓட்டுப் பகுதியில் நின்றால் மட்டுமே வெயில் மழை நம்மீது படாது.
உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோவிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோவில் நம் கண்ணில் தென்பட்டு, ‘கண்டேன், கண்டேன் உன் திருக்கோவில்’ என்று கூற வைக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
மஞ்சமாதா கோயில்:
மகிஷியை மணிகண்டன் காட்டில் வதம் செய்தவுடனே அந்த மகிஷியின் உடலிலிருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணொருத்தி வெளிவந்து ஐயப்பனை வணங்கி ‘நான் உங்கள்மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்கு காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வர வேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்…’ என வேண்டினாள்.
ஐயப்பன் அவளிடம் ‘நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்யப்பிரமாணம் செய்துள்ளேன்…’ என்று கூறி அந்தப் பெண்மணியைச் சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோவிலின் இடப்புறம் மாளிகைபுறத்து அம்மன் என்ற பெயரில் அமர்ந்து இங்கே என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஐயப்பன் கேட்டுக்கொண்டபடி, அந்தப் பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுறத்தம்மனாக அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறாள்.பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், அவளது திருக்கோவில் பிரகாரத்தைச் சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவளது அருளைப் பெற்று வருகிறார்கள்.
பம்பை நதி:
ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்தப் பம்பா நதியில் நீராடிய பின்பே சபரிமலை ஏறுகின்றனர். கங்கையை போன்ற புண்ணிய நதி பம்பா. இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சபரிமலை உள்ளது. தர்மசாஸ்தா மணிகண்டனாக இம்மண்ணுலகில் அவதரித்த இடம் இதுதான். இந்த இடத்துக்குப் பம்பா சக்தி என்ற இன்னொரு பெயரும் உண்டு. மேற்கு தொடர்ச்சி மலையின் புளிச்ச மலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு ஆலப்புழா, பந்தனம்திட்டா, மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடி வேம்நாட்டு ஏரியில் கலக்கிறது.