
தமிழில், ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நாயகியாக நடித்தவர் திகங்கனா சூர்யவன்ஷி. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்மீது போலீஸில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை ஜீனத் அமன், திகங்கனா உட்பட பலர் ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர். இதை மணீஷ் ஹரிசங்கர் என்பவர் இயக்கியுள்ளார். எம்.ஹெச். ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பின்போது நடிகை திகங்கனா தனக்கு சல்மான் கான், ஷாருக்கான், அக்ஷய்குமார் ஆகியோரை தனிப்பட்ட முறையில் நன்றாகத் தெரியும் என்று வெப் தொடரின் தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் கூறி வந்துள்ளார். பின்னர் இந்த வெப் தொடரை வழங்குவதற்கு அக்ஷய் குமாரிடம் தான் பேசுவதாகவும் இதற்காகத் தனக்கு ரூ.75 லட்சமும் அக்ஷய் குமார் பெயரில் ரூ. 6 கோடியும் கேட்டார் என்று மணீஷ் ஹரிசங்கர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது,“அக்ஷய் குமாரிடம் காண்பிக்க வேண்டும் என்று எங்கள் எடிட்டரிடமிருந்து வெப் தொடரின் முழு எபிசோடும் இருந்த ஐபேடை வாங்கிச் சென்றார். தான் தனியாகச்சென்று அக்ஷய்குமாரை சந்தித்து பேசி வருவதாகக் கூறினார். இதுவரை அதைத் திருப்பித் தரவில்லை. அதை வைத்துக் கொண்டு மிரட்டிப் பணம் பறிக்க முயற்சிக்கிறார். இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடரில் பணியாற்றிய பலருக்கு சம்பள பாக்கியை கொடுக்க வில்லை என்று இத்தொடரில் பணியாற்றிய சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.
