
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் நடிப்பில் நேற்றைக்கு வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளில் ஏகப்பட்ட காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக மாற பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான ஓபனிங்கை தரமாக செய்தது. ஆனால், வெள்ளிக்கிழமையான இன்று பல தியேட்டர்கள் பச்சை நிறத்தில் காணப்படுவது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னணி நடிகர்கள் படங்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட்டுகளை கிடைக்காத நிலை உருவாகும். ஆனால், அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படத்துக்கு முதல் ஷோவுக்கு மட்டும் தான் அப்படி ஒரு நிலைமை நேற்று பல்வேறு இடங்களில் இருந்தது.
மதியம் 12 மணி காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகின. ஆனால் அதற்கு பின்னர் பல காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.முதல் நாள் இந்திய அளவில் குட் பேட் அக்லி திரைப்படம் அதிகபட்சமாக 28.5 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வரை குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் பல படங்கள் போட்டியாக வெளியான நிலையில், வசூலில் பலத்த அடி விழும் என்றும் கூறுகின்றனர்.
அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரியா வாரியர், பிரபு, பிரசன்னா, சுனில், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள குட்பேக் அக்லி படத்தை அஜித் ரசிகர்களை தாண்டி பொதுமக்களும் ஆர்வம் காட்டி படம் பார்த்தால் மட்டுமே மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை அந்த படம் நிகழ்த்தும் என்கின்றனர். வரும் திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை உள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் குமார் கரியரில் அதிக வசூல் ஈட்டும் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
