
புதுடில்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ., வெற்றி குறித்து பேசிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘இந்த பூமியில் எப்பொழுது அதிக பாவம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் மேலே உள்ள கடவுள் பூமிக்கு வருவார் என்று பகவத் கீதையில் இருக்கிறது’ என்றார்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரம் சண்டிகர். இதன் மாநகராட்சி மன்றத்தில் மொத்தம் 35 உறுப்பினர்கள். பா.ஜ., 14, ஆம் ஆத்மி 13, காங்கிரஸ் ஏழு, அகாலி தளம் ஒன்று. இதற்கான மேயர் தேர்தல் ஜன.,30ல் நடந்தது. இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி., கிரோன் கிர், அலுவல் சாராத உறுப்பினராக ஓட்டளித்தார்.
இந்த தேர்தலில், இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ., வேட்பாளருக்கு 16 ஓட்டுகளும், இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளருக்கு 12 ஓட்டுகளும் கிடைத்தன.
இதைத் தவிர, எட்டு ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இது பெரும் சர்ச்சையானது. பா.ஜ., மோசடி செய்ததாகவும், அதற்கு தேர்தலை நடத்திய அதிகாரி அனில் மாஷி துணை போனதாகவும் ஆம் ஆத்மி மற்றும் காங்., குற்றஞ்சாட்டின. இண்டியா கூட்டணி சார்பில் பதிவான ஓட்டுகளை தேர்தல் அதிகாரி அனில் மாஷி மாற்றியமைத்து செல்லாததாக அறிவித்ததாக குற்றஞ்சாட்டின. மறு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி, மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட குல்தீப் குமார், ஹரியானா – பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து டில்லியில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: தேர்தலில் குளறுபடிகள் செய்து பா.ஜ., வெற்றி பெறுகிறது. தேர்தலில் பதிவாகும் ஓட்டுகளை பா.ஜ., திருடுகிறது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்துகிறது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குகிறது, போலி பெயர்களை சேர்க்கிறது என்ற குற்றச்சாட்டுகளை அடிக்கடி கேட்டிருப்போம். அதேபோல், கள்ளஓட்டுகள் போடப்பட்டன என்றும், ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதையும் கேட்டிருப்போம்.
பகவத் கீதையில் ஒரு வசனம் உள்ளது; அதாவது, இந்த பூமியில் எப்பொழுது அதிக பாவம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் மேலே உள்ள கடவுள் பூமிக்கு வருவார் என்று. சண்டிகரில் நடந்த தேர்தல் ஒரு சிறிய உதாரணம். சண்டிகர் மேயர் தேர்தலில் ஓட்டுகளை திருடிய பெரிய கட்சி கையும் களவுமாக பிடிபட்டது. இவ்வாறு அவர் பேசினார்.


