புதுடெல்லி: பிரதமர் மோடியின் ஆணவமே கெஜ்ரிவாலின் கைதுக்கு காரணம் என்று சாடிய அவருடைய மனைவி சுனிதா, டெல்லி மக்களுக்கு பிரதமர் துரோகம் இழைத்து விட்டதாகவும் ஆவேசமாக குற்றம் சாட்டினார்.
மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பின், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அமலாக்கத் துறை சார்பில் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு 6 நாள் விசாரிக்க சிபிஐ சிறப்பு கோர்ட் அனுமதி அளித்தது.
இந்நிலையில், கெஜ்ரிவால் மனைவி சுனிதா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரதமர் மோடி தனது அதிகார ஆணவத்தால் 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரை கைதுசெய்து, அனைவரையும் நசுக்கப் பார்க்கிறார்.
இது டெல்லி மக்களுக்கு செய்யும் துரோகம். உங்கள் முதல் அமைச்சர் எப்போதும் உங்களுடன் நின்றவர். உள்ளே (சிறையில்) இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, அவருடைய வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எல்லாம் தெரியும்” என பதிவிட்டுள்ளார்.
கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் முதல்வரின் வீட்டை சுற்றி இரண்டு அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.
ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் “சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி மூத்த அதிகாரிகளிடமிருந்து வாய்மொழி உத்தரவுகள் வந்துள்ளன. சிறிய அசம்பாவித நிகழ்வுகள் கூட ஏற்படக்கூடாது என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

