
ஆடு திருடி சிறை சென்றவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவியா என கேள்வி எழுப்பிய அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க. அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கும் விந்தையான, த.வெ.க. அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அனுபவமற்றவர்கள் ஒன்று கூடி மடம் கட்டுவது போல், ஒரு ஆட்சியை த.வெ.க-வினர் அமைத்துள்ளனர் என்றும், ஆனால், மடத்தை எப்படி பராமரிப்பது என்று திணறுகிறார்கள் என்றும், தேர்தல் நேரத்தில் வாயில் வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாக, இந்த மகானுபவர்கள் அளித்துவிட்டு, அவைகளை நிறைவேற்றுவது எப்படி என்று தெரியாமல் திணறுகிறார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், கடிவாளம் இல்லாத குதிரை போல், இந்த ஆட்சி தறிகெட்டு ஓடுகிறது எனவும், த.வெ.க. எப்படி தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்ததோ, அதேபோல், கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல், நீதி பரிபாலனமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது எனவும், கடந்த தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசியல் ரீதியான அரசு வழக்கறிஞர்கள் அனைவரும், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே விலகிவிட்டார்கள் என தெரிகிறது என்றும், அந்த இடங்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க பல லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் சொல்லவில்லை. த.வெ.க. கட்சியைச் சார்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரே நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் என்றும் தெரிவித்த அவர், அனுபவமிக்க சட்டத் துறையினரை அணுகி, தமிழகம் முழுவதும் முறையாக, திறமையான அரசு வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து, நீதி பரிபாலனத்தை சீரமைக்க வேண்டும் என்றும் த.வெ.க.அரசை அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


