
அர்மீனியாவில் அவதிப்படும் தஞ்சை இளைஞர்கள்! பிச்சை எடுக்க வைத்த மோசடி கும்பல்…
தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோசடி பேர் வழிகளால் அர்மீனியாவில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளைச் சேர்ந்த 30 பேர், குடும்ப வறுமையை போக்கவும், வேலை வாய்ப்பைப் பெறுவதற்காகவும், நெஞ்சில் நிறைந்த கனவுகளோடு, சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் நடத்தி வரும் கிரிஷ் டிராவல்ஸ் அண்ட் கன்சல்டன்ஸி, மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நிசான் எஜுகேஷனல் கன்சல்டண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் மூலமாக அர்மீனியா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படனர்.
இந்த இரு ஏஜென்சிகளும் அர்மினீயாவில் வேலை இருக்கிறது, கை நிறைய சம்பளம் கிடைக்கும் என ஆசை வார்த்தகளைக் கூறி. ஒவ்வொரு இளைஞரிடமிருந்தும் ஒன்றரை முதல் இரண்டு லட்சம்வரை பெற்றுக் கொண்டு, அவர்களை அர்மீனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
டூரிஸ்ட் விசாவில் சென்று, அர்மீனியாவில் இறங்கிய பின்பு தான் அவர்களுக்குப் பேரிடி காத்திருந்தது. ஆசை நிராசையாகிப் போனதையும் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தனர்.
லட்சக் கணக்கில் மாதம் வருமானம் என்று நினைத்துச் சென்றவர்களுக்கு, அதெல்லாம் பொய், சம்பளம் லட்சமும் இல்லை, கோடியும் இல்லை, வெறும் 20000 ஆயிரம் மட்டுமே சம்பளம் என்பது புரிந்தபோது தான் அவர்களுக்குத் தலை சுற்றியது. அதுமட்டுமா, அந்த இருபதாயிரம் ரூபாய் கூடக் கிடைக்கவில்லை.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்தபோது 15 நாட்கள் வேலை வாங்கி விட்டு, தங்கியிருந்த இடத்தையும் காலி செய்யச் சொல்லி, கழுத்தை பிடித்துத் தள்ளாத குறையாக நெருக்கடி கொடுத்து அவர்களை வெளியேற்றியது. வயிற்றுக்கும் சோறு இல்லை. பசி, பட்டினி, வேலை இல்லை, தங்க இடம் இல்லை. அரை வயிறும் கால் வயிறும் சாப்பிட்டு, ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாமல் கடுங்குளிரில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த சவுதி அரேபியாவில் உள்ள வெளி நாடு வாழ் தமிழர்கள் நலச் சங்கத்தின் தலைவர் வாஹித், மற்றும் திவான் ஆகியோர், அர்மீனியாவில் உள்ள, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்க உதவி செய்துள்ளார்கள்.
மோசடியே தொழிலாகக் கொண்டுள்ள ஏஜெண்ட்களின் வலையில் வீழ்ந்து சாப்பாட்டிற்கே தவிக்கும் 30 பேரையும் மீட்டு அவர்களை, இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்களை, அவரவர் குடும்பங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பேரில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இந்த விவகாரம்குறித்து முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாகத் தெரிவித்துள்ளதாகவும் தஞ்சை இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது போன்று தொடர் செய்திகள் வந்தவண்ணம் உள்ள போதிலும் மோசடிபேர் வழிகள், விரிக்கும் வலையில் படித்த பட்டதாரிகளே மாட்டிக், கொள்வது வேதனையான விஷயமாக உள்ளது.

