MR Vijayabaskar:கேரளாவில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் கைது!

கேரளாவில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தமிழக சிபிசிஐடி போலீசார் கேரளாவிற்கே சென்று கைது செய்துள்ளனர். இன்று மாலை அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாகப் பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாகக் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து, நிலமோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதை அடுத்து அவரைச் சி.பி.சி.ஐ.டி.போலீசார் 15 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கேரளாவில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தமிழக சிபிசிஐடி போலீசார் கேரளாவிற்கே சென்று கைது செய்துள்ளனர். இன்று மாலை அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *