
ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை பாரபட்சம் பார்க்காமல் மேற்கொள்ளும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, குடியரசு கட்சியினர் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை பாரபட்சம் பார்க்காமல் மேற்கொள்ளும் என்றும் மேலும், இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்க வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து குடியரசு கட்சி செனட் சபை எம்.பி. லின்ட்லே கிராகம் பேசியபோது, அதிபர் டிரம்பும் அவருடைய குழுவும் ரஷியாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள் என்றும் இதன்மூலம் ரத்த ஆறு ஓடுவது நிறுத்தப்படும் என்றார்.
இதையடுத்து, புதினின் போர் எந்திரத்திற்கு கச்சா எண்ணெய் வாங்கி நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.



