Ahmedabad : இந்திய ஜெர்மன் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு.!

Advertisements

அகமதாபாத்தில் ஜெர்மன் பிரதமர் பிரடரிக் மெர்சும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இருநாடுகளிடையே வணிகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
ஜெர்மன் பிரதமர் பிரடரிக் மெர்ஸ் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்துள்ளார்.

அவர் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.அதன்பின் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய உயர்நிலைக் குழுவினரும், ஜெர்மன் பிரதமர் பிரடரிக் மெர்ஸ் தலைமையிலான ஜெர்மன் குழுவினரும் பேச்சு நடத்தினர்.

அப்போது, இருநாடுகளிடையே வணிகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இப்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விரிவாகப் பேச்சு நடத்தினர். இருநாடுகளிடையேயும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு உடன்பாடுகள் கையொப்பமாகின.

இந்தக் கூட்டத்துக்குப் பின் இருநாட்டுப் பிரதமர்களும் கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, ஜெர்மன் பிரதமரின் இந்தியப் பயணம் இருநாடுகளிடையே உள்ள ஆழமான உறவுகளைக் காட்டுவதாகத் தெரிவித்தார். இரு நாடுகளிடையே தூதரக உறவு தொடங்கி 75 ஆண்டுகள் ஆவதாகக் குறிப்பிட்டார்.

இருநாடுகளிடையே வணிக முதலீட்டுத் தொடர்புகள் நமது உறவுக்குப் புதுத் தெம்பூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியா – ஜெர்மனி இடையான வணிகம் ஐயாயிரம் கோடி டாலரைத் தாண்டியுள்ளதாகவும், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட ஜெர்மன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜெர்மன் பிரதமர் பிரடரிக் மெர்ஸ் பேசும்போது, இரு நாடுகளிடையான உறவை இன்னும் மேம்படுத்த விரும்புவதாகக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *