
சென்னை: ‘தமிழக மக்களின் மீது ஏதோ ஒரு வகையில் கட்டண உயர்வைச் சுமத்தி வரும் திமுக அரசு, தற்போது பத்திரப்பதிவு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி உள்ளது’ எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மாதம் ஒரு முறை, தமிழக மக்களின் மீது ஏதோ ஒரு வகையில் கட்டண உயர்வைச் சுமத்தி வரும் திமுக அரசு, தற்போது பத்திரப்பதிவு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி உள்ளது. பத்திரப்பதிவு கட்டணத்தையும் உயர்த்தி, வழிகாட்டி மதிப்பையும் உயர்த்தி, உயர் நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காமல் செயல்படுகிறது திமுக அரசு.
இத்தனை அதிகமான கட்டணச் சுமையைப் பொதுமக்கள்மீது திணிப்பதன் பின்னணி திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வருமானத்துக்குமானதாகத் தெரிகிறதே அன்றி, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகுறித்து திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
முற்றிலும் அராஜகமான, அநியாயமான இந்தப் பத்திரப்பதிவு கட்டண உயர்வு அரசாணையை திமுக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
மத்திய அரசு வழங்கும் நிதியிலும் ஊழலா?
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றும் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தோம். தற்போது மூன்று ஆண்டுகள் கடந்தும், சுமார் 2 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்னும் நிதியுதவி வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன. மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டுவரை, மத்திய அரசு, தமிழகத்துக்கு ரூ.257 கோடி நிதி வழங்கியுள்ளது.
தமிழக மக்கள் நலனுக்காக மத்திய அரசு திட்டங்கள்மூலம் வழங்கப்படும் நிதி, மக்களைச் சென்றடைவதில்லை என்றால், இந்த நிதி எங்கே சென்றது என்பதைத் திமுக அரசு விளக்க வேண்டும். உடனடியாக, நிதியுதவி கிடைக்காமல் இருக்கும் அனைவருக்கும், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


