சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிக்கப் பா.ஜ., நினைக்கிறது!

Advertisements

லக்னோ: ‘சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிக்கப் பா.ஜ., நினைக்கிறது’ எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

உ.பி., யில் மகராஜ்கஞ்ச் என்ற இடத்தில், நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கார்கே பேசியதாவது: தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனப் பிரதமர் மோடி உரிமை கொண்டாடினார். இதன் பின்னணியில் உள்ள உண்மை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களால் அம்பலமானது. இந்தப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற விரும்புகிறார்கள். அவர்கள் சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிக்க நினைக்கிறார்கள்.

சமூக நீதி

இதைக் காங்கிரஸ் கட்சியும், இந்திய மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். 4ம் கட்ட லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, இண்டியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்தபிறகு, காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம். மகாலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களின் பெண் தலைவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

மேலும் பெண்களுக்கு அரசு வேலைகளில் 50% இடஒதுக்கீடு வழங்கப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை உறுதி செய்வோம்.உ.பி மாநிலம் மகராஜ்கஞ்சில் பல சர்க்கரை ஆலைகள் இருந்தன. ஆனால் தற்போது அனைத்தும் மூடப்பட்டன.

இரட்டை இன்ஜின்

மக்கள் இரட்டை இன்ஜின் அரசுபற்றிப் பேசுகிறார்கள். அவர்களின் ஒரு இயந்திரம் செயலிழந்தது. மற்றொன்று தண்டவாளத்திலிருந்து வெளியேறியது. ஜனநாயகத்தையும், அரசியலமைப்பை சட்டத்தையும் பா.ஜ., அழிக்க நினைக்கிறது. ஆனால் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இன்று நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதே எங்களது சித்தாந்தம். அதேசமயம் ஏழை, பிற்படுத்தப்பட்ட, தலித்துகள், பழங்குடியினருக்கு எதிராகச் செயல்படுவது பா.ஜ., சித்தாந்தம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *