
இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் புகைப் பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் புகைப் பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோருக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளை பின்பற்றி இந்தியாவிலும் 18 வயதுக்கும் குறைவாக உள்ளவர்கள் புகைப்பிடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கும் சட்டத்தை இயற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களையும் சேர்த்தால் ஆண்டுக்கு 23 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 40 முதல் 50 சதவீதம் புற்றுநோய் பாதிப்புக்கு புகையிலைப் பயன்பாடுதான் காரணமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியாவில், புகையிலை சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட அனைத்து வகையான சிகரெட்டுகளையும் புகைப்பதற்கு தடை விதிக்கும் சட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



