தவெக.வில் இணையும் நாஞ்சில் சம்பத்: உதயநிதியுடன் லடாய்; திமுக மீது கோபம்..!

Advertisements
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அரசியல்வாதியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் சம்பத். கன்னியாகுமரி மாவட்டம்,  மணக்காவிளை என்ற ஊரைச் சேர்ந்தவர்,   இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த இவரது தந்தை மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.  நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நாஞ்சில் சம்பத் நாகர் கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் பி ஏ பட்டம் படித்தவர்,
கல்லூரி காலத்திலேயே சிறந்த பேச்சாற்றல் மிக்கவர் இதன் மூலம் அவர் அரசியலில் கொடி கட்டி பறந்தார் . தொடக்க காலத்தில் திமுகவில் பணியாற்றி வந்த இவர் திமுக தலைமைக் கழக பேச்சாளராக பவனி வந்தார். பின்னர் திமுகவிலிருந்து வைகோ வெளியேறிய போது இவரும் அவருடன் வெளியேறினார். வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார்.
மதிமுக பொதுக்கூட்டங்களில் நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்பதற்கு என்றே மிகப்பெரிய அளவில் கூட்டம் திரளும் வைகோவுக்கு அடுத்தபடியாக அந்த கட்சியில் முக்கிய தலைவராக பவனி வந்தார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் . அந்த கட்சியில் அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி தரப்பட்டது .
நாஞ்சில் சம்பத் மதிமுகவிலிருந்து விலகியது அப்பொழுது மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதன் பின்னர் ஜெயலலிதா தொடர்பாக அவர் பல எதிர்மறை கருத்துகளை தெரிவித்ததுடன் அதிமுகவில் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னர்  டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் ஒரு கட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பெயரில் திராவிடம் மற்றும் அண்ணா என்ற பெயர்கள் இல்லாததால் தனக்கு வேலை இல்லை எனக் கூறி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் .
நாஞ்சில் சம்பத் அரசியல் மட்டுமன்றி இலக்கிய ரீதியாகவும் நன்றாக பேசக்கூடியவர் ஏராளமான புத்தகங்களை எழுதி இருக்கிறார். தற்போது இவர் திமுகவில் அறிவு திருவிழா என்ற இயக்கத்தின் நடுவராக செயல்பட்டு வருகிறார் . சிறந்த பேச்சாற்றல் மிக்க இளைஞர்களை வரவழைத்து அவர்களுக்கு பேச்சுப் போட்டியும் பயிற்சிகளும் நடத்தி திமுகவில் அவர்களுக்கு முக்கிய பதவிகள் தரும் பொறுப்பை நாஞ்சில் சம்பத் செய்து வருகிறார்.  இத்தகைய பேச்சு மன்றங்களுக்கு அவர் நடுவராக இருந்து வருகிறார். இந்த அமைப்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அறிவு திருவிழாவுக்கு நாஞ்சில் சம்பத்தை அழைக்கவில்லை அவர் இல்லாமலேயே அந்த விழா நிறைவு பெற்றது . இதனால் ஏராளமான திமுகவினர் நாஞ்சில் சம்பத்தை தொடர்பு கொண்டு விசாரித்து வந்தனர். முன்னதாக அறிவு திருவிழா நடைபெறும் சமயங்களில் நாஞ்சில் சம்பத்துக்கு பேசுவதற்கான வாய்ப்புகள் தரப்படவில்லை இதனால் ஏற்கனவே அவர் மனக் கொதிப்பிலிருந்து வந்தார் .
இதற்கிடையே நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் தொடங்கியதில் இருந்தே அந்த கட்சியை நாஞ்சில் சம்பத் ஆதரித்து பேசி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தை பாராட்டி பேசிய அவர் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் உள்ள யானைச் சின்னம் வாகை மலர் ஆகியவற்றையும் பாராட்டி பேசினார் . இது மட்டுமல்லாமல் கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டபோது இது தமிழக வெற்றிக்கழகத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்று கருத்து தெரிவித்தார் .
மேலும் திமுகவுக்கு போட்டியாக அதிமுக இல்லை தமிழக வெற்றி கழகம் தான் திமுகவுக்கு முதல் எதிரி என்றும் தனது கருத்தை வெளிப்படுத்தி வந்தார். உச்சகட்டமாக நடிகர் விஜய்க்கு திரளும் கூட்டத்தை கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன் . எம் ஜி ஆருக்கு வந்த கூட்டத்தை விட தற்பொழுது விஜய்க்கு அதிக அளவில் கூட்டம் கூடுகிறது என்றும் பேசி வந்தார் .
நாஞ்சில் சம்பத்தின் இத்தகைய பேச்சுக்களால் தான் திமுக தரப்பில் அவரை முன்னிலைப்படுத்தவில்லை என தெரிகிறது . தற்பொழுது உதயநிதிக்கும் நாஞ்சில் சம்பத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால் தமிழக வெற்றிக்கழகத்தில் நாஞ்சில் சம்பத் இணையலாம் என்ற தகவல் பேசும் பொருளாகி இருக்கிறது . இதற்கிடையே நாஞ்சில் சம்பத்தை பொருத்தவரையில் சுற்றுப்பயணங்களோ அல்லது பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவோ முடியாத அளவில் அவரது உடல்நிலை பலவீனமாக இருக்கிறது .
இதனால் அவர் வீட்டில் இருந்தபடியே ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார் . இது குறித்து அவரே கருத்து தெரிவித்திருக்கிறார்.  எனக்குமுன்பு போல் உடல் வலிமை இல்லை வெளியே எங்கும் பரபரப்பாக இயங்கி பிரச்சாரம் செய்யும் சூழ்நிலையிலும் நான் இல்லை என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார் . இது மட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழகம் தொடர்பாக உங்களை யாராவது தொடர்பு கொண்டார்களா என்ற கேள்வியும் கேட்கப்பட்டது அப்படி யாரும் என்னை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் பதிலளித்திருக்கிறார்.
இருந்த போதிலும் தமிழக வெற்றி கழகத்தில் இணையாமல் அந்த கட்சிக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் தொடர்ந்து குரல் கொடுப்பார் எனத் தெரிய வந்திருக்கிறது . தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரையில் நல்ல பேச்சாளர்கள் தேவைப்படுவதால் நாஞ்சில் சம்பத்துடன் திரை மறைவில் ஒரு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது . அதன் பேரிலேயே நாஞ்சில் சம்பத் சமீப காலமாக தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் என்கிறார்கள் .
இதனைத் தொடர்ந்து திமுகவில் தற்போது அவர் வகித்து வரும் பதவியில் இருந்து விரைவில் விலக்கப்படுவார் என தெரிகிறது . நாஞ்சில் சம்பத்
பல்வேறு கட்சிகளுக்கு தாவிய நிலையில் இருந்தாலும் அவரது பேச்சும் கருத்துக்களும் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *