நாடாளுமன்ற விவாதத்திற்கு மத்திய அரசு முழுத் தயார் – அமித்ஷா அறிவிப்பு!

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எதுகுறித்தும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘காணாமல் போய்விட்டார்’, ‘ஓடிவிட்டார்’ போன்ற வார்த்தைகள் இந்தியாவின் பொதுவாழ்விலும், நாடாளுமன்றத்திலும் தான் அண்மைக்காலமாக அதிகளவில் கேட்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே நான் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் இயங்க விடாமல் தடுக்கும் போது ஒருவர் என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினார். ‘நீட்’ போராட்டம் தொடர்பாக முழுமையான விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளது என்பதை நமது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மிகவும் தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறினார்.
மேலும், விவாதத்திற்கான நேரத்தை நிர்ணயிக்குமாறும், எதிர்கட்சியினரைத் தயாராக இருக்குமாறும் நாங்களும் கேட்டுக்கொண்டோம் என்று தெரிவித்தார். அதுதான் அவர்களின் ஆரம்பக்கட்டக் கோரிக்கையாகவும் இருந்தது, நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டோம் என்று கூறினார். ஆனாலும், அவர்கள் விவாதம் நடைபெறுவதை விரும்புவதில்லை, இப்போது யார் ஓடி ஒளிவது என்பதைப் பொதுமக்களே தீர்மானிக்கட்டும் என்று தெரிவித்தார். எனவே, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *