திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்குத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்குக் கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகத் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
இதன்படி, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

