தாராபுரம் இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் இன்று தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சத்தியபாமா போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து இன்று சித்ராவுத்தன்பாளையம் பகுதியில் உள்ள மாருதி நகர் பகுதியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்திற்காக சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்டோபர் 6ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், தாராபுரத்தில் விஜய் மேற்கொள்ளும் இன்றைய பிரசாரம் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மதுராந்தகம் தொகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், தற்போது தாராபுரம் தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்காக நேரடியாக களத்தில் இறங்குகிறார்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகள் எப்படி?
விஜய் பங்கேற்கும் கூட்டத்தையொட்டி தாராபுரத்தில் காலை முதலே தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வரத் தொடங்கியுள்ளனர்.
அதே நேரத்தில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு கட்டாயம் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிச் சீட்டு பெற்ற 5,000 பேர் மட்டுமே கூட்டத்திற்குள் நேரடியாக அனுமதிக்கப்பட உள்ளனர். அனுமதி இல்லாதவர்கள் கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வராமல், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக நிகழ்ச்சியைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள், குழந்தைகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
முதலமைச்சர் விஜயின் வருகையையொட்டி தாராபுரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கூட்டம் நடைபெறும் பகுதி மற்றும் விஜய் பயணிக்கும் வழித்தடங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கூட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக கனரக வாகனங்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் தாராபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.
தாராபுரம் தேர்தல் களம்
தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சத்தியபாமா, திமுக வேட்பாளர் சுகன்யா மற்றும் அதிமுக வேட்பாளர் பானுமதி கருணாகரன் ஆகியோர் உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதனால், மூன்று முக்கிய அரசியல் அணிகளின் பிரசாரமும் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் நேரடியாக தாராபுரம் களத்திற்கு வருவது, தொகுதியில் தவெகவின் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
தாராபுரத்தில் இன்று ஒலிக்கப்போகும் விஜயின் அரசியல் குரல்… இடைத்தேர்தல் களத்தில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..



