எஸ்ஐஆர் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் ட்விட்டரில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வாயைத் திறந்து உங்கள் அறியாமையை வெளிப்படுத்துவதை விட, சில சமயங்களில் அமைதியாக இருப்பதே சிறந்தது. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
சென்னையில் சி.பா.ஆதித்தனாரின் 122 ஆவது பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் வெங்கட்ரமணன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ராஜ்மோகன் பதிலளிக்கையில், “அன்றும் சரி, இன்றும் சரி, என்றும் சரி, தவெக எஸ்ஐஆர் திட்டத்தை எதிர்க்கிறது. எஸ்ஐஆரின் முழு செயல்பாடும் மிகப் பெரிய மோசடியாக இருக்கிறது. தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்றால் எஸ்ஐஆர் முறையி சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என அன்றும் எங்கள் தலைவர் சொன்னார். அந்த நிலைப்பாட்டில்தான் இன்றும் இருக்கிறோம்.
ஆனால் இவர்கள் எல்லாம் பலிகடாக்கள்.. தனிநபரை மாற்றும்படி போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு அவர்களே அவரை மாற்றிவிட்டு இதில் இருந்து தப்பித்துக் கொள்ள பார்க்கிறார்கள். ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோருவது திசை திருப்பும் செயல், இதற்கு நாங்கள் இரையாக மாட்டோம். அன்று முதல் எஸ்ஐஆர் விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். எஸ்ஐஆரை எதிர்க்கிறோம்.
அரசியலுக்காக போராட்டம் நடத்தி அறிக்கை விடும் கட்சி தவெக அல்ல, கருத்து சுதந்திரத்திற்கு லட்சுமண கோடு என்று ஒன்று இருக்கிறது. அந்த கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டு உங்களுக்கு என்ன தகவல் வேண்டுமோ அந்த தகவலை நாங்கள் வாங்கித் தருகிறோம். எஸ்ஐஆர் பணிகளின் போது குறிப்பிட்ட வாக்குகள் நீக்கப்பட்டன. அவ்வாறு நடைபெறாமல் இருந்திருந்தால் பெருவாரியான வாக்குகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும்” என தெரிவித்திருந்தார்.
தலைமை தேர்தல் ஆணையரை மாற்றக் கோரும் திசை திருப்பும் அரசியலுக்கு நாங்கள் இரையாக மாட்டோம் என அமைச்சர் ராஜ்மோகன் பேசிய கருத்துக்கு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் பதிலடி கொடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சந்து , விவேக் ஜோஷி ஆகியோர் எஸ்ஐஆருக்கு 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஞானேஷ்குமார் தனிப்பட்ட முறையில் எஸ்ஐஆரை செயல்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.




