இரண்டு ரெய்டுக்கு பயந்து அடகு வைத்த எடப்பாட- ஸ்டாலின் தாக்கு.!

Advertisements

இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் எனவும், அ.தி.மு.க. – பா.ஜ.க. தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

நேற்றைய தினம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அளித்த பேட்டி, அவர் வகிக்கும் பதவிக்குத் தகுதியானதாக இல்லை. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்து கொள்வது அவரது விருப்பம் சார்ந்தது. ஆனால் எதற்காக இந்தக் கூட்டணியை உருவாக்கினார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் என்று சொல்லவில்லை. மாறாக, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கப் போவதாக அவர் உறுதி அளித்துள்ளார். நீட் தேர்வை – இந்தித் திணிப்பை – மும்மொழிக் கொள்கையை – வக்பு சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறது அ.தி.மு.க , இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா? இது எதைப் பற்றியும் உள்துறை அமைச்சர் பேசவில்லை.

இன்றைய அ.தி.மு.க. பொறுப்பாளர்களது உறவினர் குடும்பங்களைச் சுற்றியும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இரண்டு சோதனைகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள பா.ஜ.க. தலைமையை நோக்கி அவர்கள் ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்ததே ‘ஊழல்’ தான் என்பதை அனைத்தும் அறிந்த தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.இரண்டு ரெய்டுகள் நடந்தவுடன் அ.தி.மு.க.வை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள்.

தமிழை ஒழிக்க இந்தி, தமிழர்களது வளர்ச்சியைத் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள், தமிழ்நாட்டு உரிமையைப் பறிக்க தொகுதி மறுவரையறை – எனத் திட்டமிட்டு தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்.” என கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *