
அரசு பஸ்களை இயக்கத் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அசல் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தி உள்ளது.
சென்னை: ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை விடுவிப்பு, பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கட்கிழமை நள்ளிரவில் தொடங்கிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாகத் தொடர்கிறது. கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை.
தொழிற்சங்கங்கள் சொன்ன 6 கோரிக்கைகள் 2 கோரிக்கைகளை மட்டுமே தற்போதைக்கு பரீசிலிக்க முடியும். மற்ற கோரிக்கைகளைப் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பேசிக்கொள்ளலாமென அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது ஏற்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கியது.
இதனால் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் ஓடுமா என்ற கேள்வி மக்களுக்கு எழுந்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொமுச மற்றும் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. இதனால் அந்தச் சங்க ஊழியர்களைக் கொண்டும், தற்காலிக பேருந்து ஓட்டுநர்களைக் கொண்டும் மக்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டது.
இதனிடையே, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில் அரசும், போக்குவரத்து சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரிக்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து இன்று பிற்பகலில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 97.7 சதவீத பஸ்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15 ஆயிரத்து 226 பஸ்களில் 14 ஆயிரத்து 888 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மாநகர பஸ்கள் 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், அரசு பஸ்களை இயக்கத் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அசல் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தி உள்ளது.



