
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த பெருமழையாலும் வெள்ளத்தாலும் 15 குழந்தைகள் உட்பட 51 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெருமழை பெய்து ஆறுகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் கெர் மாவட்டத்தில் குடலூப் ஆற்றில் கரைபுரண்டு பாய்ந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்ததில் மட்டும் 43 பேர் உயிரிழந்தனர்.
ஆற்றங்கரையில் உள்ள கிறிஸ்டியன் இளைஞர் முகாம் என்ற இல்லத்தில் தங்கியிருந்த சிறார்கள் 27 பேர் காணாமல் போயினர்.
டெக்சாஸ் முழுவதும் மழை, வெள்ளப் பாதிப்பில் 15 குழந்தைகள் உட்பட மொத்தம் 51 பேர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மீட்புப் படையினர் காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதற்காக மும்முரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 850 பேரை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்தப் பெருமழையும் வெள்ளப் பெருக்கும் அவற்றால் ஏற்பட்ட இழப்புகளும் இயற்கைப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதாக டெக்சாஸ் மாநில ஆளுநர் கிரெக் அப்பாட் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸ் பெருமழை வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், அமெரிக்க அரசுக்கும் பிரதமர் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். வெள்ளத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


