வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
ஜனநா யக கட்சி சார்பில் தற்போ தைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளில் டிரம்பைவிட கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய கருத்துக்கணிப்பில் இரு வரும் இடையே சிறிய அளவில்தான் வித்தியாசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறும்போது, கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் சில விகிதங்களில் முன்னேறி வந்தாலும் தொடக்கம் முதலே டிரம்ப் சராசரியாக 47 சதவீத ஆதரவுடன் உறுதியான இடத்தில் இருந்து வருகிறார்.
கிராமப்புறங்கள் அதிகம் உள்ள, மத உணா்வு அதிகம் கொண்ட, நிற சகிப்புத் தன்மை இல்லாத, வெள்ளை இன உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த மாகாணங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிதான் வெற்றி பெறும்.
நகா்ப்புறமான, பன்முகத்தன்மையை போற்றுவோா், கல்லூரி பட்டதாரிகளை அதிகம் கொண்ட மாகாணங்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக உள்ளன.
ஆனால் நகரங்கள், கிராமங்கள் இரண்டும் நிறைந்த, இரு வகை மக்களும் வாழும் பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜாா்ஜியா, வடக்கு கரோலினா, அரிசோனா, நவாடா போன்ற மாகாணங்கள் எந்த தோ்தலில் எந்த கட்சிக்கு வாக்களிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இந்த மாகாணங்கள்தான் அமெரிக்க அதிபரை முடிவு செய்பவை களாக உள்ளன.
ப்ளூம்பா்க்-மாா்னிங் கன்சல்ட் கணிப்புகளில், கமலா ஹாரிஸ் ஒரே ஒரு மாகாணத்தில் அதிக முன்னிலையும் நான்கு மாகாணங்களில் 49-லிருந்து 51 சதவீதம் வரையிலான முன்னிலையும் வகிக்கிறாா். இரு மாகாணங்களில் டிரம்ப்புடன் சமன் செய்கிறாா்.
வால் ஸ்ட்ரீட் ஜா்னல், கினிபியாக், சபோல்க்-யு.எஸ்.ஏ. டுடே போன்றவற்றின் கருத்துக்கணிப்புகளிலும் 48 முதல் 49 சதவீத ஆதரவுடன் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறாா். 43 முதல் 48 சதவீத ஆதரவுடன் டிரம்ப் சற்று பின்தங்கி உள்ளாா்.
அமெரிக்க தோ்தலில் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதிபா்கள் தோ்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாகாண மக்கள்தொகையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள தோ்வுக் குழுக்கள் தான் அதிபரைத் தோ்ந்தெடுக்கும். மொத்தமுள்ள 538 தோ்வுக் குழுக்களில் 270 குழுக்களின் ஆதரவைப் பெறுபவா்தான் வெற்றி பெறுவாா்.
அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டால்கூட அது தோ்தல் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும். தற்போதைய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்தாலும், போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.இவ்வாறு அவா்கள் தெரிவித்தனர்.