
ஹார்மஸ் நீரிணை ஒரு போதும் முந்தைய நிலைக்கு வராது என்றும், குறிப்பாக எதிரிகளான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்காகத் திறக்கப்படாது என்றும் ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்துப் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் செல்லும் வழியான ஹார்மஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தி வருகிறது.
இந்தியாவுக்கு எண்ணெய் இயற்கை எரிவாயு ஏற்றி வரும் ஒரு சில கப்பல்களை அவ்வழியே அனுமதிக்கும் ஈரான் அரசு, மற்ற கப்பல்கள் தாக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. ஹார்மஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அரசு அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை.
அதேநேரத்தில் ஈரான் கடற்படை எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், மண்டலத்தின் நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பாரசீக வளைகுடாவில் பாதுகாப்புக் கட்டமைப்பு நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஹார்மஸ் நீரிணைப் பகுதியில் கடற்படைப் பாதுகாப்பைக் கொண்டு வருதல், கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்தல், உடனடிப் பதிலடி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், ஈரானிய கடற்பகுதிகளைக் காத்தல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் கூட்டாளி நாடுகளைத் தவிர மற்ற அனைவருக்கும் ஹார்மஸ் நீரிணை திறந்திருக்கும் என்றும் ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது…


