
சென்னை கண்ணகி நகரில் பணிக்குச் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த துப்புரவுப் பணியாளர் குடும்பத்துக்கு 20 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கியுள்ளார்.
சென்னையிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடியவிடியக் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியிருந்தது.
இந்நிலையில் கண்ணகி நகரைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர் வரலட்சுமி அதிகாலையிலேயே பணிக்காகப் புறப்பட்டுச் சென்றார். அப்போது தெருவில் தேங்கியிருந்த நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து வரலட்சுமியின் குடும்பத்தினரும் ஊர்மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் துப்புரவுத் தொழிலாளரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அவர்களின்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மின்வாரியம் சார்பில் பத்து இலட்ச ரூபாய், துப்புரவுப் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் என மொத்தம் 20 இலட்ச ரூபாய்க்கான காசோலைகளையும் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.

