
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசுப் பேருந்தில் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம் என்றும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 இலட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் நாள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து லாஸ்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது, புதுச்சேரியை அதானிக்குச் சொந்தமாக்க பாஜக விரும்புவதாகவும், முக்கியத்துவம் வாய்ந்த காரைக்கால் துறைமுகத்தை ஏற்கெனவே விற்றுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரியில் அரசின் ஒப்பந்தப் பணிகளுக்கு 30 விழுக்காடு கமிசன் பெறப்படுவதாகவும், அரசு தரகு முகவராகச் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், பொதுத்துறையிலும் தனியார் துறைகளிலும் முப்பதாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம் என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 இலட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் என்றும் கூறினார்.



