
அம்பத்தூர்: அம்பத்தூரில் நடந்த பெண் கொலை வழக்கில் 5 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் – நந்தினி தம்பதி. இதில் சதீஷ் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அம்பத்தூர் அத்திப்பட்டு ஐ.சி.எப்காலனியில் போண்டா பாலாஜி என்பவரைக் கொலை செய்த வழக்கில் சிறை சென்று திரும்பியவர். இந்நிலையில் போண்டா பாலாஜியின் ஆட்கள் கடந்த சில வருடங்களாகவே சதீஷ் மற்றும் அவரது மனைவி நந்தினியை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளனர். அது தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில் நந்தினி சகோதரர் மதன் என்பவர் நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை காரணமாகத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நந்தனி தனது தம்பியின் உடலைப் பார்ப்பதற்காக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு ஐ.சி.எப்காலனி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்புக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், போண்டா பாலாஜியின் ஆட்கள், தனது தம்பியின் மறைவுக்கு நந்தினி மற்றும் அவரது கணவர் சதீஷ் ஆகியோர் வருவார்கள், அப்போது அவர்களைத் தீர்த்துக் கட்டலாமெனக் காத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நந்தினி தனது தோழி காவியாவுடன் தம்பியின் உடலைப் பார்ப்பதற்காகத் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நந்தினி வருகை அறிந்து போலீசார் பலமுறை எச்சரித்தும் நந்தினி, தம்பி மதன் உடலை நல்லடக்கம் செய்தபின்பு செல்வதாகக் கூறியுள்ளார். அங்கு அனைத்து சடங்குகளும் முடிந்த பிறகு நந்தினி வீட்டிற்கு கிளம்ப தயாரானபோது, போண்டா பாலாஜியின் ஆட்கள் 7 பேர் கொண்ட கும்பல் நந்தினியை சரமாரியாக வெட்ட, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நந்தினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் போண்டா பாலாஜியின் சகோதரர்கள் ஆறுமுகம், சீனு மற்றும் போண்டா பாலாஜியின் நண்பர் பாக்யராஜின் மனைவி லிடியா உட்பட 7 பேர் கொண்ட கும்பல் நந்தினியை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆறுமுகம், சீனு, லிடியா, சூர்யா, ராஜி ஆகிய 5 பேரை மடக்கிப்பிடித்த தனிப்படை போலீசார், அவர்களைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தலைமறைவாக உள்ள 2 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

