4.5 Kg Of Gold Seized From Plane’s Toilet: கழிவறையில் நான்கரை கிலோ தங்க கட்டிகள்!

அபுதாபியிலிருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபியிலிருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அபுதாபியிலிருந்து வந்த பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர். ஆனால் யாரிடமும் எதுவும் இல்லை.

இந்த நிலையில் பன்னாட்டு விமானமாக வந்து விட்டு உள்நாட்டு விமானமாகச் செல்ல இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்திற்குள் ஏறிச் சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் வயர்கள் செல்லக்கூடிய அறை பகுதியைச் சோதனை செய்தபோது அவற்றில் நம்பர் லாக்குடன் கருப்பு நிற டேப் சுற்றப்பட்ட சோப் வடிவில் ஒரு பொருள் இருந்தது.

அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது இரண்டரை கோடி மதிப்புள்ள நான்கரை கிலோ தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்க கட்டிகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இதைக் கடத்தி வந்தது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *