இன்று திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா தொடங்கியது!

Advertisements

திருப்பரங்குன்றம்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக அதிகாலையில் உற்சவர் சன்னதியில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.

அங்குத் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.

இதையொட்டி கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மா இலை, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.

விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளித் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

வருகிற பிப்ரவரி 6-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத்தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி காலையில் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருக்கும் மிதவை தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுவார்.

பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து அருள்பாலிப்பார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *