
தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகளாக நிலவி வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளார் நடிகர் விஜய். அவர் பதவியேற்றவுடன் தனது அரசியல் நிலைப்பாட்டை உரக்கச் சொல்லிவிட்டார்.
தனது ஆட்சியில் ‘பவர் சென்டர்’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை மிகத் தெளிவாக அவர் குறிப்பிட்டார்.
“இந்த ஆட்சியில் எனக்குத் தெரியாமல் எந்த ஒரு நகர்வும் இருக்காது. திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் நானே இறுதி முடிவெடுப்பேன். என்னை மீறி யாரும் இங்கே அதிகாரத்தைச் செலுத்த முடியாது” என்று அவர் கூறியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முந்தைய காலங்களில், ஆளுங்கட்சியில் முதலமைச்சரைத் தவிர்த்து அவரது குடும்ப உறுப்பினர்களும், தனித்தனியாகப் ‘பவர் சென்டர்களாக’ உருவெடுத்து, அரசைத் தங்களுக்குச் சாதகமாக இயக்கிய கதைகள் நிறைய உண்டு. ஆனால், “நானே அதிகார மையம், என் மக்கள் மட்டுமே எனக்கு எஜமானர்கள்” என்று விஜய் கூறியிருப்பது, தமிழக நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிப்பதாக சொல்கிறார்கள்.
அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசியது மட்டுமின்றி, ஊழல் குறித்து தனது கடுமையான எச்சரிக்கையை விஜய் விடுத்தார். “யாராவது ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த ஆட்சிக்குள் நுழைந்திருந்தால், இப்போதே அந்த எண்ணத்தை மறந்துவிடுங்கள். ஊழலுக்கு இங்கே இடமே இல்லை. மக்கள் வரிப்பணத்தில் ஒரு பைசா கூட தொடக்கூடாது… மக்கள் பணம் வேண்டாம்.. மீண்டும் சொல்கிறேன் மக்கள் பணம் ஒரு ரூபாய் கூட எனக்கு வேண்டாம்,” என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.
கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும் ‘பவர் சென்டர்’ சிக்கல்கள் பெரும் விமர்சனங்களைச் சந்தித்தன. இதுவரை நடந்த திமுக ஆட்சிகளில் கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் பல அதிகார மையங்கள் இருந்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.
குறிப்பாக, அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு மற்றும் அமைச்சர்களுக்கு இடையேயான அதிகாரப் போட்டி நிர்வாகத்தைச் சீர்குலைத்ததாகப் பல செய்திகள் வெளியாகின.ஒரு கோப்பில் கையெழுத்திட வேண்டுமெனில், பல அடுக்கு அதிகார மையங்களைக் கடக்க வேண்டிய நிலை நிலவியது.
இது திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் பெரும் காலதாமதத்தை ஏற்படுத்தியது.இதேபோல், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரண்டு அதிகார மையங்கள் உருவானது நிர்வாகத்தில் பெரும் குழப்பத்தை விளைவித்தது. இதனால் அரசு இயந்திரம் முடங்கிய நிகழ்வுகளும் அரங்கேறின..
முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் ஒரு ‘ஒற்றை அதிகாரத் தலைமை’ பண்பைக் கொண்டு வந்துள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், இடைத்தரகர்களின் குறுக்கீட்டைத் தவிர்க்கவும் இதுவே சரியான வழி என்று சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்..
“மக்களின் கோரிக்கைகள் நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு வரும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இனி எந்த அமைச்சரோ, கட்சி நிர்வாகியோ அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டத்திற்குப் புறம்பான காரியங்களில் ஈடுபட முடியாது,” என்ற விஜய்யின் உறுதிமொழி தமிழக மக்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது..
தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த ஆட்சி, வெறும் பெயரளவில் மட்டும் மாற்றமாக இல்லாமல், நிர்வாகக் கட்டமைப்பிலும் ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சையைச் செய்யத் தயாராகிவிட்டது என்பதை முதலமைச்சர் விஜய்யின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..


