
2026 தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க. தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போகுமே தவிர, எங்களது தலைவரோ, தி.மு.க.வோ காணாமல் போகாது என்றும், மீண்டும் தி.மு.க.வின் 2.0 தொடரும் என்றும் புதுக்கோட்டையில், தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கலைஞர் பூங்கா முன்பு, மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்படும், கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக, மதி அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை, ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களை எல்லாம், தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து என்றும், நயினார்-நாகேந்திரன் தனக்கு கொடுத்த தலைவர் பதவியை தக்க வைப்பதற்காக, எதை வேண்டுமென்றாலும் பேசி வருகிறார் என்றும், புதிய கூட்டணிகள் அவர்களிடத்தில் செல்லப் போவதில்லை எனவும், 2026 தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க. தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகுமே தவிர, எங்களது தலைவரோ, தி.மு.க.வோ காணாமல் போகாது, மீண்டும் தி.மு.க.வின் 2.0 தொடரும் என்றும், அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.



