சரிந்த அதிமுக கோட்டை.. விஜய் அலையில் தப்பிய எஸ்.பி. வேலுமணி.! 

Advertisements

நடிகர் விஜய், திமுகவுக்கு எதிராக கூரான வாளைச் சுழற்றிக் கொண்டே ‘அதிமுக பலவீனமாகிவிட்டது; அதற்கு தலைமை சரியில்லை’ என்று மீண்டும் மீண்டும் மேடைகளில் சொல்லி அதிமுக வாக்குகளுக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருந்தார். தனது பிரச்சார வாகனத்தில் தனது படத்துக்குப் பின்னணியில் அண்ணாவையும், எம்ஜிஆர் படத்தையும் பொறித்துக் கொண்டார். ஆக பெரியார், எம்ஜிஆர், அண்ணா என யாரையும் விஜய் விட்டுவைக்கவில்லை.

உங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர் பிடிக்கும் ஆனால் அதிமுக மேல் அதிருப்தியா என்னிடம் வாருங்கள், உங்களுக்கு பெரியார், அண்ணா பிடிக்கும் திமுக மேல் அதிருப்தியா என்னிடம் வாருங்கள் என்று அனைத்துக்கட்சியின் தொண்டர்களையும் தன் பக்கம் இழுத்தார்.

தமிழகத்தில் ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்பதுடன், கோவை மாவட்டத்தின் நிலவரமும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக கவனிக்கப்பட்டது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதி மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்தது. திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் கடும் போட்டி நிலவிய நிலையில், அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக  இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் மொத்தம் 1,88,878 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,58,799 வாக்குகள் பதிவாகின. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. திமுக சார்பில் செந்தில் பாலாஜி, அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இந்தத் தொகுதி கடந்த காலங்களில் அதிமுகவின் பலமான கோட்டையாக இருந்தாலும், இந்த முறை திமுக சார்பில் செந்தில் பாலாஜி சிறப்பு கவனத்துடன் களம் இறங்கினார். தேர்தலுக்கு முன்பே கோவைக்கு குடிபெயர்ந்து தீவிர பிரச்சாரம் செய்தது இந்தத் தொகுதியை மிகவும் பரபரப்பாக மாற்றியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து செந்தில் பாலாஜி முன்னிலையில் இருந்தார். தவெக வேட்பாளர் செந்தில் குமார் பல சுற்றுகளில் முன்னிலை பெற்று, அதிமுகவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தினார்.

இறுதியில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 59,167 வாக்குகள் பெற்று 1,991 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் செந்தில் குமார் 57,176 வாக்குகள் பெற்று நெருக்கமான இரண்டாம் இடத்தை பிடித்தார். அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் 31,236 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் 5,017 வாக்குகளும் பெற்றனர். மொத்தத்தில், வெற்றி திமுகவுக்கு சென்றாலும், கோவை தெற்கு தொகுதியில் தவெக காட்டிய வலுவான போட்டி, அந்தக் கட்சி இந்த மண்டலத்தில் வேகமாக வளர்ந்து வருவதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனால், கோவையை அதிமுகவிடம் இருந்து கைப்பற்ற திமுக கங்கணம் கட்டியிருந்தது. ஆனால், சத்தமில்லாமல் தவெக கோவையில் 6 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் தவெக சம்பத்குமார் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் திமுக இரண்டாவது இடத்தை பிடித்தது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் 48 ஆயிரம் வாக்குகள் பெற்று 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொ.ம.தே.க வேட்பாளர் நித்யானந்தன் வெற்றி பெற்றுள்ளார். வால்பாறையில் திமுகவின் சுதாகர் வெற்றி பெற்றுள்ளார்.கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும் தி.மு.க. பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. கோவை தெற்கில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ஜனதா வெற்றி பெற்றது.

இதேபோல் கடந்த 2016 தேர்தலிலும் சிங்காநல்லூர் தொகுதியை தவிர, மற்ற 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. கடந்த 25 ஆண்டுகளாக கோவை மாவட்டம் அ.தி.மு.க. கோட்டையாக விளங்கியது. இந்த நிலையில் அ.தி.மு.க. கோட்டைடையை  இந்த தேர்தலில் த.வெ.க. தன்வசப்படுத்தி உள்ளது.  கோவை வடக்கு, சூலூர், கிணத்துக்கடவு. சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய 6 தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவுக்கு இந்த தேர்தலில் கோவையில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதாவது, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மட்டும் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மற்ற 9 தொகுதிகளையும் அதிமுக இழந்தது. அதோடு, 3வது இடத்துக்கும் பல இடங்களில் தள்ளப்பட்டுள்ளது. இது,  அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *