சென்னை:
சென்னை நகரில் ஏ.சி. வசதி கொண்ட புறநகர் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ஏ.சி. வசதி கொண்ட மெமு ரெயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயிலை செங்கல்பட்டு வரை நீட்டிக்கவும் திட்டம் உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெற்கு ரெயில்வே செய்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில், அதாவது டிசம்பர் இறுதிக்குள் ரெயில் பெட்டி தொழிற்சாலையிலிருந்து முதல் ஏ.சி. மெமு ரெயில் தயாராக உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியது, முதல் ஏ.சி. மெமு ரெயிலை இயக்குவதற்கு சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தை இறுதி செய்துள்ளோம். ஆனால் சேவையைச் செங்கல்பட்டு வரை நீட்டிக்கும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது.
சாதாரண ஏ.சி. மெமு ரெயில்களுக்கான அடிப்படை கட்டணம் 10 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.29 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 491 முதல் 500 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.423 ஆகும்.
11 முதல் 15 கி.மீ. வரையிலான பயணங்களுக்குக் கட்டணம் ரூ.37 ஆகவும், 16 முதல் 25 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு ரூ.56 ஆகவும் கட்டணம் இருக்கும்.
10 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.590 ஆகவும், 15 நாட்களுக்கு ரூ.445 ஆகவும், வாராந்திர சீசன் டிக்கெட் ரூ.295 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் – தாம்பரம் இடையே 25 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.1,200 ஆகவும், 15 நாட்களுக்கு ரூ.900 ஆகவும், வாராந்திர சீசன் டிக்கெட் ரூ.605 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சென்னை – திருவள்ளூர் இடையே டிக்கெட் கட்டணம் ரூ.85 ஆகவும், சென்னை-செங்கல்பட்டு இடையே ரூ.99 ஆகவும், சென்னை – திருத்தணி இடையே ரூ. 123 ஆகவும், சென்னை – திருப்பதி இடையே ரூ.170 ஆகவும், சென்னை – புதுச்சேரி இடையே ரூ.204 ஆகவும் நிர்ணயிக்கப்பட உள்ளது.