Aavesham Teaser: மீண்டும் வில்லன் லுக்கில் அதகளம்.. வரவேற்பைபெரும் டீசர்!

Advertisements

நடிகர் ஃபஹத் ஃபாசில் (Fahadh Faasil) வில்லன் ரோலில் நடிக்க பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘ஆவேஷம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சென்ற ஆண்டு மலையாள சினிமா தாண்டி தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் ஹிட் அடித்த திரைப்படம் ‘ரோமஞ்சம்’. காமெடி மற்றும் பேய் கதைக்களத்தைச் சேர்ந்த இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் இன்ஸ்டா ரீல்ஸை ஆக்கிரமித்து பெரும் ஹிட் அடித்தன.

இந்நிலையில், ‘ரோமஞ்சம்’ பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக ஜித்து மாதவன் இயக்கும் திரைப்படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் ஃபஹத் ஃபாசில் நடித்து வருகிறார். சென்ற ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் கொடூர வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கொண்டாட வைத்த ஃபஹத், இந்தப் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.

ரோமஞ்சம் படத்துக்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். ஃபஹத்தின் மனைவியும் நடிகையுமான நஸ்ரியா இந்தப் படத்தை அன்வர் ரஷீத் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஆவேஷம் படத்தின் டீசர் (AAVESHAM Official Teaser) வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. பொதுவாகவே மாறுபட்ட கெட்- அப்களைத் தேர்ந்தெடுத்து அசத்தும் ஃபஹத், இந்த டீசரில் கழுத்து நிறைய சங்கலி, வேட்டி, சகிதம் லோக்கல் ரவுடியாக  வலம் வந்து மீண்டும் வில்லன் லுக்கில் அதகளம் செய்துள்ளார்.

மலையாள சினிமா தாண்டிய ஃபஹத்தின் ரசிகர்கள் மத்தியில் இந்த டீசர் வரவேற்பைப் பெற்று வருகிறது, வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *