Robbery: கொள்ளயர்களை சுற்றிவளைத்த தனிப்படை!

Advertisements

தஞ்சையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகளைக் கொள்ளையடித்து சென்றவரை டவுன் டிஎஸ்பி ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகளைக் கொள்ளையடித்து சென்றவரை டவுன் டிஎஸ்பி ராஜா தலைமையிலான தனிப்படையினர் போலீசார் கைது செய்தனர். மேலும் தஞ்சை தெற்கு போலீஸ் பகுதிக்குட்பட்ட வீட்டிலிருந்து திருடப்பட்ட 11 பவுன் நகையையும் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை நியூ ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஷ். சிங்கப்பூரில் இன்ஜினியராக உள்ளார். இவருடைய மனைவி கீதா. வல்லத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். கடந்த 20ம் தேதி காலைக் கீதா தனது மகளுடன் வீட்டைப் பூட்டி விட்டுப் பள்ளிக்குச் சென்று விட்டார். தொடர்ந்து கீதாவின் மகள் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து கீதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு 48 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கீதா, தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் நசீர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் நகர டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நசீர், சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, ஏட்டுக்கள் கோதண்டபாணி, சிவக்குமார், காவலர்கள் அருண்மொழிவர்மன், சையது இஸ்மாயில், திருக்குமரன், விஜயசந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சித்ரா நகர் பகுதியைச் சேர்ந்த வீரையன் மகன் வெங்கடேசன் (33) என்பவர் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் வெங்கடேசன் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு வெங்கடேசன் இருந்துள்ளார்.

உடன் அவரைப் பிடித்துத் தனிப்படை போலீசார் விசாரித்ததில் கொள்ளையடித்த நகைகளை வீட்டில் மறைத்து வைத்திருந்ததை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆயுதபூஜையன்று தஞ்சை சரபோஜி கல்லூரியில் வார்டனாகப் பணியாற்றும் ஆறுமுகம் என்பவரின் வீட்டிலிருந்து 12 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களைத் திருடியதும் வெங்கடேசன் என்பதும் தெரிய வந்தது. அந்த நகைகளையும் போலீசார் மீட்டு வெங்கடேசனை கைது செய்தனர். தொடர்ந்து வெங்கடேசனை புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதுகுறித்து நகர டிஎஸ்பி ராஜா கூறியதாவது: பகல் நேரத்தில் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியில் வீடு புகுந்து நடந்த கொள்ளை சம்பவத்தில் விசாரணை மேற்கொண்டோம். அப்பகுதியை நன்கு தெரிந்த நபர்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். 200க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிலர் சந்தேக வட்டத்திற்குள் வந்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணை ஒரு நபர் மட்டும் நியூ ஹவுசிங் யூனிட் உட்பட நகர் பகுதியில் சுமார் 3 மணிநேரம் சுற்றி, சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த நபர்குறித்து நடந்த விசாரணையில் அவர் நாஞ்சிக்கோட்டை சாலை சித்ரா நகர் வெங்கடேசன் என்பது தெரியவந்தது. உடன் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தபோது நியூ ஹவுசிங் யூனிட் மற்றும் சரபோஜி காலேஜ் வார்டன் ஆறுமுகம் வீட்டிலும் வெங்கடேசன் திருடியது தெரிய வந்து மொத்தம் 60 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், ஏடிஎம் கார்டு, வெளிநாட்டு கரன்சி, வீட்டு பூட்டை உடைக்க பயன்படுத்திய கடப்பாரை ஆகியவற்றை மீட்டுள்ளோம். வெங்கடேசனுக்கு தலை வழுக்கை என்பதால் விக் வைத்துக் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மிக வேகமாக விசாரணை மேற்கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *