பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் குறித்து மதகுரு நசீர் மத்னி வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சர்வதேச அளவில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு கூட்டத்தின் மேடையில் பேசிய மதகுரு நசீர் மத்னி, பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு 10,000 பயங்கரவாதிகளை ஹபீஸ் சையத் அனுப்பியுள்ளதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மத்னியின் இந்தக் கருத்துக்கள், ஜம்மு-காஷ்மீரில் அரங்கேறும் நாசவேலைகளில் லஷ்கர்-இ-தொய்பாவின் நேரடிப் பங்கையும், அதன் தலைவர் ஹபீஸ் சையதின் நாசகாரச் செயல்களையும் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு பயங்கரவாத வழக்குகளில் மோஸ்ட் வான்டட் குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் ஹபீஸ் சையத், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவராவார். இந்த அமைப்புக்கு அல்-கொய்தா மற்றும் தலிபான் அமைப்புகளுடன் இருந்த நெருங்கிய தொடர்புகள் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2005-ஆம் ஆண்டிலேயே இதற்குத் தடைவிதித்தது. மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்தல் மற்றும் சதித் திட்டங்களைத் தீட்டியதன் அடிப்படையில், 2008-ஆம் ஆண்டில் அமெரிக்கா ஹபீஸ் சையதை உலகளாவிய பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய வரலாற்றில் மறக்க முடியாத கருப்பு நாளாகப் பதிவான கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இரவு, 10 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்தனர். தாஜ் ஓட்டல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் மற்றும் பல்வேறு முக்கியப் பகுதிகளில் அவர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்தினர். அடுத்த நான்கு நாட்கள் நீடித்த இந்த நயவஞ்சகத் தாக்குதலில் 166 பொதுமக்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்; 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மும்பையின் முக்கியப் பகுதிகளை உலுக்கிய இந்தத் தாக்குதலின் பின்னணி விசாரணையிலும் ஹபீஸ் சையதின் பெயர் முக்கியக் குற்றவாளியாக இடம்பெற்றது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக உள்ள ஹபீஸ் சையதிற்கு எதிராக, ஜூலை மாதத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பாக ஜம்மு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை (NBW) பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற பாகிஸ்தானியக் குற்றவாளிகளுக்கும் எதிராக மும்பை காவல் துறையினர் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கோரத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையதின் பெயர் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இத்தகைய செயல்கள் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.



