மேற்கு வங்காளத் தலைநகர் கொல்கத்தாவின் மிர்சா காலிப் பகுதியில் இயங்கி வரும் ஐந்து மாடிக்கட்டிடத்திலுள்ள ஓட்டலில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட கோர தீ விபத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கொல்கத்தாவில் நேர்ந்த தீ விபத்துச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. இத்துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம் பெறப் பிராத்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



