
தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையில் விவசாயி மணி என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை கீழூர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் மணி (வயது60). இவர் கடந்த நவம்பர் 13ம் தேதி மர்மநபர்களால் அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.இதில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.இந்தநிலையில் இந்த கொலைவழக்கில் தொடர்புடைய 9பேரை போலீசார் கைது செய்துள்ளார்.

அதில் லெட்சுமணன் (எ) லெச்சார், சீனிபாண்டி, இசக்கிமுத்து (எ) பாபுஜி, பேச்சிமுத்து (எ) கட்டபேச்சி, மாரி (எ) மதன், சங்கரசுப்பு, இசக்கிமுத்து, ராமையா (எ) பழனி மற்றும் மாரியப்பன் (எ) மாரியரசு ஆகிய 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விவசாயி மணி படுகொலை வழக்கில் கைதான 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் 9 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்தியசிறையில் அடைத்தார்.

