Kalarpatti double murder: நிலப் பிரச்சனையால் செய்தியாளர் படுகொலை!

Advertisements

சேலம் எடப்பாடி அருகே நிலப் பிரச்சனையால் ஏற்பட்ட விரோதத்தில் செய்தியாளரும் அவருடன் வாகனத்தில் சென்றவரும் படுகொலை. கொலை செய்த தந்தை மற்றும் அவரது பதினைந்து வயது மகன் கைது.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட, இருப்பாளி கிராமம் கலர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு அரசியல் கட்சியில் உள்ளார்.செல்வராஜிக்கும், முருகனுக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்பகை இருந்துள்ளது.

இந்த நிலையில் செல்வராஜ் அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் பெறுவதற்காக கந்தசாமி என்பவரை அழைத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் குருக்குப்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளார்.அங்கு வேலை முடிந்து செல்வராஜியும்,கந்தசாமியும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில், கலர்பட்டி, மாலங்காட்டான் தெரு அருகே உள்ள மோரி பகுதியில் எதிரே டாட்டா சுமோ வாகனத்தில் வந்த முருகன், செல்வராஜ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார்.இதில் நிலை தடுமாறி செல்வராஜியும், கந்தசாமியம் கீழே விழுந்துள்ளனர்.

அப்போது டாட்டா சுமோ வாகனத்தில் வைத்திருந்த அரிவாளுடன் இறங்கிய முருகன், செல்வராஜியை நோக்கி பாய்ந்து உள்ளார்.உடனே எழுந்து ஓட முயன்ற செல்வராஜை துரத்திச் சென்ற முருகன் தன் கையில் வைத்திருந்த அறிவாளால் செல்வராஜின் தலையில் பலமாக வெட்டியுள்ளார்.மேலும் முருகனை பின்தொடர்ந்து ஸ்கூட்டி வாகனத்தில் வந்த முருகனின் 15 வயது மகன், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த செல்வராஜை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.இதை தடுக்க முயன்ற கந்தசாமிக்கும் கத்திக் குத்து தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயம் அடைந்த செல்வராஜையும், கந்தசாமியையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற செல்வராஜ் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையிலும், கந்தசாமி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிர் இழந்தனர்.இறப்பதற்கு முன்பாக இருவரும் காவல்துறையினரிடம் முருகனும் அவரது மகனும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக மரண வாக்குமூலம் அளித்தனர்.

பூலாம்பட்டி காவல்துறையினர் கொலையாளிகளான தந்தை முருகன் மற்றும் அவரது 15 வயது மகன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து முருகனின் மகன் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

கொலை செய்யப்பட்ட செய்தியாளர் செல்வராஜிக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். நில பிரச்சனை தொடர்பாக எடப்பாடி அருகே வாகனத்தில் மோதியும்,அரிவாளால் வெட்டியும் இருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *