
இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீப்பிடித்ததில் அதில் சிக்கிய நோயாளிகள் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் நேற்றிரவு தீப்பிடித்தது.
அந்தக் கட்டடத்தில் தீத்தடுப்புக் கருவிகள் இல்லாததுடன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தீப்பற்றியதை அறிந்ததும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரும் நோயாளிகளை விட்டுவிட்டுத் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயைக் கட்டுப்படுத்தப் போராடினர்.
தீவிபத்தில் நோயாளிகளில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்து 24 பேரை டிராலிகளில் வைத்துப் பாதுகாப்பான வேறிடத்துக்குக் கொண்டு சென்றதாகவும், ஆறு பேரை மட்டும் காப்பாற்ற முடியவில்லை என்றும், மேலும் ஐவரின் நிலை சிக்கலாக உள்ளதாகவும் அந்தப் பிரிவின் பொறுப்பாளர் அனுராக் தாகத் தெரிவித்துள்ளார்.
கட்டடத்தில் தீயைக் கட்டுப்படுத்த எந்த வசதியும் இல்லை என்றும், அரசின் அலட்சியத்தாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறிப் பொதுமக்கள் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீவிபத்துக்குப் பொறுப்பேற்று இராஜஸ்தான் மாநில நலவாழ்வுத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.



