காங்கிரஸ் சுரங்க அமைச்சகத்தையே விற்றுவிட்டதாகப் பாஜக குற்றச்சாட்டு.!

காங்கிரஸ் கட்சி 1956ஆம் ஆண்டில் சுரங்க அமைச்சகத்தையே விற்றுவிட்டதாகப் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிசிகாந்த் துபே குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொலம்பியாவில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி, இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிசிகாந்த் துபே, ராகுல்காந்தியின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1956ஆம் ஆண்டில் நேரு ஆட்சியில் சுரங்க அமைச்சகத்தையும், பெட்ரோலிய அமைச்சகத்தையும் தனியார் நிறுவனமான சிராஜுதீன் கம்பெனிக்கு விற்றுவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்திக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் 1963ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் மாளவியா பதவி விலகியதைச் சுட்டிக் காட்டினார்.

இந்த வழக்கில் 1977ஆம் ஆண்டு மாளவியா சிறை சென்றதையும், 1980ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டதையும் நிசிகாந்த் துபே சுட்டிக்காட்டினார்.

ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசி காயத்திரி தேவி தன்னை விட அழகானவர் என்கிற பொறாமை இந்திரா காந்திக்கு இருந்ததாகக் குறிப்பிட்டார். அதனால் 1975ஆம் ஆண்டு காங்கிரஸ் காயத்திரி தேவி மீதும், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போர்களில் குறிப்பிடத் தக்க பங்காற்றிய அவர் மகன் பவானி சிங் மீதும் போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் குற்றஞ்சாட்டிச் சிறையில் அடைத்ததாகவும் நிசிகாந்த் துபே குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *