இன்று 500 மருத்துவ முகாம்கள் – அமைச்சர் மா.சு!

Advertisements

புயலால் கனமழை பெய்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று 500 மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

ஃபெஞ்சல் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைநீர் தேங்கி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இம்மாவட்டங்களில் இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுதொடர்பாக நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் டிச.1-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடத்தப்படும். இதில் சென்னையில் மட்டும் 200 மருத்துவ முகாம்களும், மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்களும் நடைபெறவுள்ளன. இந்த மருத்துவ முகாம்கள் தேவைக்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்மருத்துவ முகாம்களில் காய்ச்சல், சளி பரிசோதனை, ரத்த கொதிப்பு, நீரழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மருந்துகள், உப்பு – சர்க்கரை கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகள் தேவைக்கு அதிகமாகக் கையிருப்பில் வைத்துக்கொள்ள மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பிடங்களுக்கு அருகே அமைக்கப்பட உள்ள மருத்துவ முகாம்களைப் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *