S. S. Sivasankar: விடியல் பயண திட்டம் மூலம் 50 இலட்சம் பெண்கள் பயணம்!

Advertisements

போக்குவரத்துத்துறை கடனிலும், நஷ்டத்திலும் இயங்கி வருகின்ற நிலையில், முதல்வர் உத்தரவின் படி  இதுவரை கட்டண உயர்வு செய்யாமல் இயங்கி வருகின்றது என்றும் முதல்வரின் விடியல் பயண திட்டம்மூலம் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என மேலூரில் புதிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தைத் திறந்து வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் புகழாரம் சூட்டினார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே விநாயகபுரம் பகுதியில் 2.25 ரூபாய் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம். மற்றும் 3.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தைத் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் வணிகவரி, மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி…
தமிழகத்தில் நிதிநிலை மோசமாக உள்ள நிலையிலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார்.

வரும் இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில் எல்லா தேவைகளும் பூர்த்தியாகி தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறும் அதற்குத் தொடர்ந்து மக்கள் முதல்வருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.

தமிழகத்தில் 2500 புதிய பேருந்துகள் வாங்குவதற்காகத் தமிழக அரசு ஜெர்மன் வங்கியிடம் கடன் பெற்று தொடர்ந்து புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பேருந்துகள் மாற்றப்பட்டு அந்த வழி தடத்தில் புதிய பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போக்குவரத்துத்துறை கடனிலும், நஷ்டத்திலும் இயக்கி வரும் நிலையில், இது மக்களுக்கான சேவையாற்றும் துறையென முதல்வரின் உத்தரவின் படி இதுவரை கட்டண உயர்வு செய்யப்படாமல் இயங்கி வருகின்றது. பக்கத்து மாநிலங்களில் டீசல் விலை உயரும்போது பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கட்டண உயர்வு செய்யப்படாமல் போக்குவரத்துத்துறை செயல்படுகின்றது.

அதேபோல வடமாநிலங்களில், பேருந்துக் கட்டணம் இரண்டு மடங்காக உள்ளபோது, தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைவாக உள்ளதாக வட மாநில இளைஞர்கள் வீடியோ வெளியிட்டுப் பேசி வருகின்றனர்.

தமிழக முதல்வரின் விடியல் பயண திட்டம்மூலம் 50 இலட்சம் பெண்கள் பயண மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டம் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வரை பெண்கள் சேமிக்கப்பட்டு வருவதாக மாநில திட்டக் குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இத்திட்டம் தற்போது மலை பிரதேசங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு  செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்ற திட்டங்களைச் செயல்படுத்துகின்ற முதல்வராக ஸ்டாலின் திகழ்ந்து வருகின்றாரெனப் புகழ்ந்து அப்போது பேசினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, போக்குவரத்துத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டுனர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *