90 மணி நேர வேலை – எல்&டி தலைவருக்கு ஆனந்த் மஹிந்திரா பதிலடி!

Advertisements

லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்என் சுப்ரமணியன், ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசிச் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

எவ்வளவு நேரம் தான் வீட்டிலேயே உட்கார்ந்து மனைவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று அவர் பேசியது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

வருடத்துக்கு ரூ. 51 கோடி, அதாவது, எல்&டி ஊழியர்களைவிட 535 அதிகம் சம்பளம் வாங்கும் சுப்ரமணியன் இதைச் சொல்லலாமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

70, மணி நேரம் வேலை பார்க்கச் சொன்ன இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கோஷ்டியில் தற்போது சுப்ரமணியன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் சுப்பிரமணியன் கருத்துக்குப் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பதிலடி கொடுத்துள்ளார்.

சனிக்கிழமையன்று ஒரு ஊடக நிகழ்வில் பேசிய மஹிந்திரா, நான் சமூக ஊடகத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறேன் என்று பலர் கேட்கின்றனர்.

நான் எக்ஸ் தளத்தில் நேரம் செலவிடுகிறேன், ஆனால் அது நான் தனிமையில் இருப்பதால் அல்ல. எனது மனைவி அற்புதமானவர், அவரைப் பார்த்துக்கொண்டே இருப்பதை நான் விரும்புகிறேன்.

எனவே நான் நண்பர்களை உருவாக்கச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவில்லை, தொழில் நிமித்தமாகவே அதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறேன்.

90 மணிநேர வேலை வார விவாதம் தவறானது. வேலை நேரத்தின் அளவைவிட, வேலையின் தரத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். நாராயண மூர்த்தி மற்றும் பிறர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனவே இதை நான் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

ஆனால் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும், இந்த விவாதம் தவறான திசையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். 10 மணிநேரம் ஆனாலும் என்ன அவுட்புட் செய்கிறாய்? என்பது முக்கியம். 10 மணி நேரத்தில் உலகையே மாற்றிவிடலாம்.

பல நாடுகள் நான்கு நாள் வேலை வாரத்தைப் பரிசோதித்து வருகின்றன. படிக்கவும், சிந்திக்கவும் நேரம் தேவை. நீங்கள் வீட்டில் நேரத்தைச் செலவிடாமல், படிக்காமல், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடாமல் அது சாத்தியமில்லை.

நம் தொழிலை எடுத்துக் கொள்வோம், நீங்கள் ஒரு காரை உருவாக்குங்கள். ஒரு காரில் ஒரு வாடிக்கையாளர் என்ன விரும்புகிறார் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்.

நாங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் எப்போதும் அலுவலகத்தில் இருந்தால், மற்ற குடும்பங்கள் என்ன வகையான காரில் உட்கார விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் எப்படி புரிந்துகொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பிய ஆனந்த் மஹிந்திரா, உங்கள் ஜன்னல்களைத் திற, காற்றை உள்ளே விடுங்கள். நீங்கள் எப்போதும் சுரங்கப்பாதையில் இருக்க முடியாது என்ற காந்தியின் கூற்றை மேற்கோள் காட்டினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *