
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கழுதூரில் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கழுதூரில் நேற்று வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது, மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் உடனடியாகச் சென்னையிலிருந்து விரைந்து வந்து, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கனிதா, சின்னபொண்ணு, பாரிஜாதம், ராஜேஸ்வரி ஆகியோரின் உடல்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் அமைச்சர் தெரிவித்துக்கொண்டார். முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும், ஈமச்சடங்குகளுக்காகத் தலா 50,000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்.



