3,458 கோடி ரூபாய் கல்வி நிதி எப்போது வரும்? – மு.க.ஸ்டாலின் கேள்வி.!

தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் கல்வி நிதி எப்போது வரும்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார். பிரதமர் மோடி இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்துக்கு வருகிறார்.

அதை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற பிரதமர் எப்போது உறுதியளிப்பார் என்று வினவியுள்ளார். பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அட்டூழியம் எப்போது முடிவுக்கு வரும்? என்றும் வினவியுள்ளார்.

தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் மத்திய அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? என்றும் வினவியுள்ளார்.ஊரக வேலைத் திட்டத்தில் மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் போக்கு எப்போது முடிவுக்கு வரும்? என்று கேட்டுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? என்றும், இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுத் திட்டங்களுக்காகக் கோரிய நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? என்றும் வினவியுள்ளார். ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *