பூண்டி ஏரி இன்று மதியம் திறக்க முடிவு!

Advertisements

சென்னை:

பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று (டிச.,12) மதியம் 1.30 மணிக்குத் திறக்கப்படுகிறது. விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படும் எனத் திருவள்ளூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடி. இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். நீர் இருப்பு 34.05 அடியாகவும், கொள்ளளவு 2,839 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று(டிச.,12) மதியம் 1.30 மணி அளவில் விநாடிக்கு 1,000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாகத் திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களைப் பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *