
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நசரத்பேட்டை ரயில் நிலையம் அருகே 14 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளான்.
சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து, காணாமல் போன சிறுவனைத் தேடி வந்த நிலையில், இன்று சிறுவன் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே மீட்கப்பட்டுள்ளான்.
சிறுவனைக் கடத்திச் சென்ற பிச்சை எடுக்க வைக்கும் கும்பலைச் சேர்ந்த ஐந்து பெண்களில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் சகிதா பேகம். இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஆறு வயது மற்றும் மூன்று வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் சகிதா பேகம் தனது இரு மகன்களுடன் சென்னையில் உள்ள காய்கறி கடை ஒன்றில் வேலை பார்ப்பதற்காகக் கடந்த ஜனவரி 12ஆம் தேதி ரயிலில் எழும்பூருக்கு வந்துள்ளார்.
சென்னை வந்தபிறகு, காய்கறி கடை ஊழியர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாகத் தெரிவித்ததால் இரண்டு மகன்களுடன் சகிதா பேகம் அங்குச் சென்றுள்ளார்.
அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரது 6 வயது மகன் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவர் அங்கு நீண்ட நேரமாகத் தன் மகனைத் தேடியுள்ளார்.
எங்குத் தேடியபோதும் மகன் கிடைக்காத நிலையில், உடனடியாகச் சகிதா பேகம் சென்ட்ரல் பாதுகாப்பு படை மற்றும் சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் தன் மகனைக் காணவில்லையெனப் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து உடனடியாகப் போலீசார் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது சிறுவன் முதலில் இரண்டு இளைஞர்களுடன் இருந்த நிலையில், அவர்கள் ரயிலுக்கு நேரமானதால் கிளம்பிய நிலையில், அடுத்ததாகச் சிறுவன் ஒரு பெண்ணுடன் சென்றது தெரியவந்தது.
அந்தச் சிறுவனை அழைத்துச் சென்ற பெண் யார், அவர் எங்குச் சென்றாரெனப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுவன் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.
சென்னை முழுவதும் ரயில் நிலையங்களில் அலர்ட் செய்யப்பட்டு, சிறுவனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யப்பட்டது. சிறுவனைக் கண்டுபிடிக்கச் சென்ட்ரல் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட போன அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நசரத்பேட்டை ரயில் நிலையம் அருகே 14 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளான்.
சிறுவனைக் கடத்திச் சென்றவர்கள், பிச்சை எடுக்க வைக்கும் கும்பலைச் சேர்ந்த பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சிறுவனைக் கடத்திச் சென்ற ஐந்து பெண்களில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட மாநிலத்துக்குச் செல்லும் ரயில் மூலமாகச் சிறுவனை அந்தப் பெண்கள் ஆந்திராவுக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் 14 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
