
டேராடூன்:
அரசுக்குத் தெரியாமல் லிவிங் உறவு முறையில் வாழ்பவர்களுக்குச் சிறை தண்டனை விதிக்க வழி வகை செய்யும், பொது சிவில் சட்டம் இன்று முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமலாகிறது.
இதன் மூலம இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் இருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு அம்மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில், பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக நிற்க வைக்கப்பட்ட புஷ்கர் சிங் தாமி, நான் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவேன் என்று கூறியிருந்தார்.
தேர்தலில் மக்கள் அவரை முதல்வராக வெற்றி பெற செய்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு பொது சிவில் சட்டம்குறித்த தீர்மானத்தை அவர் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.
அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இன்று முதல் சட்டம் அமலாகிறது.
இந்தச் சட்டத்தின்படி, இனி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மதம், சாதி, இன குழுக்களுக்கும் திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் ஒரே சட்டம் பொருந்தும்.
இதில் பழங்குடியின மக்களுக்கு மட்டும் விதி விலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்புகள் இருந்தபோதும், சட்டமாக இன்று முதல் இது அமலாகிறது.
இந்தச் சட்டத்தின் படி இனி உத்தரகாண்ட்டில் லிவிங் உறவில் இருப்பவர்கள், அதுகுறித்து அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஒருவேளை, அவர்கள் தங்கள் உறவை 1 மாதமாகியும் தெரிவிக்கவில்லை எனில், அவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அபராதமும், சிறை தண்டனையும் இதற்காக வழங்கப்படும். லிவிங் உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவை முடித்துக்கொள்ள விரும்பினால், அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
திருமணங்களைப் பொறுத்தவரை, அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமானதாக மட்டுமே இருக்க முடியும். இப்படி அறிவிப்பதன் மூலம் மாற்று பாலினத்தவர்களுக்கான திருமணம் அங்கீகரிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோலத் திருமணத்தைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
விவாகரத்தை பொறுத்தவரையில், கணவனோ, மனைவியோ வேறு மதம் மாறினால் அது விவாகரத்துக்கான காரணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது.
உத்தரகாண்ட்டில் இந்தச் சட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக இங்கு, இந்துக்களின் எண்ணிக்கை அதிகம்.
அதேபோல இஸ்லாமியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக உத்தரகாண்டில் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
