தோனி என்ற பெயரைக் கேட்டவுடனேயே நமக்குள் ஒரு சித்திரம் உருவாகும்..!

Advertisements

தோனி என்ற பெயரைக் கேட்டவுடனேயே நமக்குள் ஒரு சித்திரம் உருவாகும். அசாத்தியமான ஒரு ஸ்கோரை மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஓவர்களுக்குள் எடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பந்திலும் எதைச் செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு அதன்படி ஆடி, கடைசியில் ஒரு பெரிய வின்னிங் ஷாட்டோடு போட்டியை முடித்துக் கொடுப்பார். டெத் ஓவர்களை நெருங்குகையில் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் தோனி உள்ளே வருகிறார் என்றாலே எதிரணி வீரர்கள் பதறுவார்கள்.

அதுதான் தோனியின் அடையாளம். காலம் காலமாக அவரை அப்படித்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், கடந்த வாரத்தில் அதற்கு அப்படியே நேர்மாறான தோனியைப் பார்க்க முடிந்தது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சேஸிங்கில் சென்னை அணி விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருக்கிறது. போட்டி கையை மீறிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், தோனி களத்திற்கு வரவே இல்லை. ஒரு கட்டத்தில் சென்னை ஜெயிக்கவே வாய்ப்பில்லை எனும் கட்டத்தில் 9-வது வீரராக பேட்டை வீசிக் கொண்டு வந்தார். தோனி எத்தனையோ சவால்மிக்க போட்டிகளை ஒற்றை ஆளாக வென்று கொடுத்துப் பார்த்திருக்கிறோம். வெல்ல முடியவில்லையெனினும் கடைசி வரை களத்தில் நின்று போராடுவார். ஆனால், முதல்முதலாக அன்றைக்கு பெவிலியனிலிருந்து அணியின் தோல்வியை வேடிக்கை பார்த்த தோனியைக் கண்டோம்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் நிறைய கேள்விகள் எழுகின்றன. தோனிக்கு இப்போது 43 வயதாகிறது. தன் உச்சக்கட்ட ஆட்டத்தையெல்லாம் ஆடி முடித்துவிட்டார். 2020-க்குப் பிறகே அவரால் பெரிய இன்னிங்ஸ்களை ஆட முடியவில்லை. அதிக வயதினால் நிறைய காயமடைந்தார். தன்னால் முன்பு போல நின்று பெரிய இன்னிங்ஸ்களை துல்லியமாக ஆடி, போட்டிகளை வென்று கொடுக்க முடியாது என்பதை அவரும் உணர்ந்தார். அதனாலேயே பேட்டிங் ஆர்டரில் தன் முக்கியத்துவத்தைக் குறைத்துக்கொண்டார்.

கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் இறங்கி முட்டிக்கு வேலை கொடுக்காமல் பேட்டை வீசி சிக்ஸர்களைப் பறக்கவிடுவதை மட்டுமே தன்னுடைய வேலையாக வைத்துக்கொண்டார். அணி வலுவாக இருக்கும்போது, எல்லா வீரர்களும் பார்மில் இருக்கும்போது தோனி அப்படி ஆடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இப்போதைய சென்னை அணி அப்படி இல்லை. கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்க தோனி மாதிரியான ஒரு வீரர் மேல் வரிசையில் வந்து பொறுப்பை ஏற்று ஆட வேண்டும். ஆனால், தோனியே நினைத்தாலும் அதைச் செய்ய முடியாத நிலையில் அவரின் உடல் தகுதி இருக்கிறது.

தோனியின் உடற்தகுதியும் முழங்காலும் முன்பு போல இல்லை. அவர் களத்தில் துடிப்பாகத்தான் செயல்படுகிறார். ஆனாலும் அவருக்கு முழங்காலில் நீண்ட நாள்களாகப் பிரச்னை இருக்கிறது. அவரால் 10 ஓவர்களுக்கு நின்று பேட்டிங் ஆடி ஓடி ஓடி ரன்கள் சேர்க்க முடியாது என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

நவீன டி20 சூழல் எவ்வளவோ மாறிவிட்டது. இங்கே ஒரு வீரர் எவ்வளவு அதிகமான பொறுப்புகளை எடுத்துக் கொண்டு ஆட முடியும் என்பதைத்தான் அணிகள் பார்க்கின்றன. அப்படியிருக்க, சென்னை அணியிலோ தோனியின் ரோல் விக்கெட் கீப்பிங் என்பதாக மட்டும்தான் இருக்கிறது. தோனிக்கு இருக்கும் மாபெரும் ரசிகர் வட்டம், அவரைச் சுற்றியிருக்கும் வணிகம், அவரின் இமேஜ் இவற்றையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு ஒரு வீரராக மட்டுமே அவரைப் பார்த்தால் எந்த அணியின் லெவனிலுமே அவர் முதல் சாய்ஸாக இருக்கமாட்டார்.

தோனி நீண்ட காலமாக கேப்டனாக இருந்தவர். தன் அணியில் முழுமையான உடல்தகுதி இல்லாமல் வெறுமனே ரசிகர்களின் விசில் சத்தத்துக்காகவும் டிக்கெட் விற்பனைக்காகவும் ஒரு வீரரை ஆட வைக்கச் சொன்னால் தோனியே அதைச் செய்திருக்க மாட்டார். 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு சச்சின், சேவாக், கம்பீர் போன்ற சீனியர்களை அவர்களின் வயதையும் உடல் தகுதியின்மையையும் காரணம் காட்டியே தோனி ஓரங்கட்டினார்.

அந்த தோனிக்கு ரசிகர்களை மனதில் வைத்து ஒரு முடிவை எடுப்பதே பிடிக்காது. அவருக்கு அணியின் நலனுக்கு எது நல்லதோ அந்த முடிவை எடுக்க வேண்டும். அந்த தோனி இப்போதுள்ள தோனியைத் தலைமை தாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தால் தோளில் கை போட்டு தயவுசெய்து சீக்கிரம் ஓய்வை அறிவியுங்கள்…’என ஆலோசனை கூறியிருப்பார், அல்லது அந்த முடிவை எடுப்பதை நோக்கி அவரைத் தள்ளியிருப்பார். அந்த இடத்தில் ஒரு இளம் வீரரை எடுத்து வளர்த்தெடுக்கலாம் என்பதுதான் அவரின் எண்ணமாக இருந்திருக்கும்.

தனது ஓய்வு அறிவிப்பைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பதன் மூலம் தோனி உருவாக்கி வைத்திருக்கும் கலாசாரமும் அபாயகரமானதாகவே இருக்கிறது. சென்னைச் சேப்பாக்கம் மைதானத்தில் கூடும் கூட்டத்தை புத்திக்கூர்மைமிக்க ரசிகர் கூட்டம் என வெளிநாட்டு வீரர்களே பாராட்டுவார்கள். பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று கைதட்டிய ரசிகர் கூட்டம் இது. தங்களின் சொந்த அணியைவிட, நன்றாக கிரிக்கெட் ஆடிய ஒரு அணியைப் பாராட்டும் பக்குவம் அவர்களிடம் இருந்தது. இந்த மண்ணுக்கே உரிய நல்ல ரசனையின் வெளிப்பாடு அது. ஆனால், அந்தக் கூட்டம் இப்போது தோனிக்காக எடுத்திருக்கும் ரூபத்தை சகித்துக்கொள்ள முடியவில்லை.

தோனி கடைசியில் வந்து ஆடும் அந்த இரண்டு பந்துகளுக்காக தங்களுடைய சொந்த அணியின் வீரரையே அவுட் ஆகச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர். அணி தோற்றாலும் தோனி அடிக்கும் இரண்டு சிக்சர்கள் எங்களுக்குப் போதும் என அதிலேயே திருப்திப்பட்டுக் கொண்டு ஆர்ப்பரிக்கிறார்கள். தோனி பிடிக்கும் அந்த இரண்டு பந்துகளுக்காக பிளாக்கில் பல ஆயிரங்களைக் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கவும் தயாராக இருக்கிறார்கள். நாயகர்களுக்காக உருவாக்கப்படும் மாயப்பிம்பத்தில் சிக்கித் தவிக்கும் ரசிகர்களைப் போல கிரிக்கெட் ரசிகர்களும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். விளையாட்டால் ஒரு மனிதரின் வாழ்க்கையை மாற்ற முடியும். விளையாட்டால் மக்களை ஒன்றிணைக்க முடியும். அதை வெறுமனே வழிபாட்டு மனநிலையோடு அணுகுவது பேராபத்து.

தி ஆர்ட் ஆப் லிவிங் என்பார்கள். ஒரு இடத்தில் நம்முடைய வேலை முடிந்துவிட்டாலோ, நாம் அதற்கு மேல் அந்த இடத்தில் தேவைப்படவில்லை என்பதை உணர்ந்தாலோ, எந்தச் சலனமுமின்றி வெளியே வந்துவிட வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் தோனி அதைத்தான் செய்திருந்தார். யாரும் அவரை நோக்கி எப்போது ஓய்வு பெறுவீர்கள் எனக் கேட்கும் முன்பே சூழலை உணர்ந்து ஓய்வை அறிவித்தார். இப்போதும் அவரை யாரும் எப்போது ஓய்வு பெறுவீர்கள்’ எனக் கேட்கவில்லை.

ஆனால், தன்னுடைய ஓய்வு அறிவிப்பைத் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்வதன் மூலம் அவர் தவறான முன்னுதாரணமாக மாறிக்கொண்டிருக்கிறார். விளையாட்டைவிட ஒரு தனி நபர் பெரிய ஆள் இல்லை என்பதை தோனியும் ஒத்துக்கொள்வார். விளையாட்டின் மேன்மையை அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிடக் கூடிய தூதுவராக தோனி இருக்க விரும்பினால், சீக்கிரமே நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *