
திருப்புவனம் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் கண்டறியப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் வலது கை மூட்டுக்கு மேலேயும், வலது கை மணிக்கட்டுக்கு கீழேயும் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலது பக்க நெற்றி, வலது பக்க கன்னம், இடது புஜம் ஆகிய இடங்களில் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடதுபக்க காதில் ரத்தம் வடிந்த நிலையிலும், வலது பக்க காதில் உள்பக்கம் ரத்தம் உறைந்த நிலையிலும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இடதுபக்க தோள்பட்டை முதல் முழங்கை மூட்டு வரையும், இடது பக்க விலாவிலும் கன்றிய காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடதுபக்க இடுப்பு, வலதுபக்க பின் முதுகில் சிராய்ப்புகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல கைவிரல்கள் உட்புறமாக மடங்கி விரைப்பாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் பிரேத பரிசோதனை, இம்முறை சுமார் 5 மணி நேரம் வரை நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் பின்புறம் நகைகளை ஒளித்து வைத்ததாகக் கூறப்படும் மாட்டுக்கொட்டகையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அப்போது தப்பிக்கும் நோக்கில் அஜித்குமார் ஓடியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஓடியபோது கால் தவறி கீழே விழுந்ததாகவும் அப்போது அஜித்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காவலாளி உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, தனிப்படை காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.


